மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே உயர் அழுத்த மின்கம்பி மீண்டும் பழுது:அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 4¼ மணி நேரம் தாமதம்

உயர் அழுத்த மின்கம்பி மீண்டும் பழுது அடைந்ததால் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 4¼ மணி நேரம் தாமதமாக கோவில்பட்டிக்கு வந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
கோவில்பட்டி, 

உயர் அழுத்த மின்கம்பி மீண்டும் பழுது அடைந்ததால் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 4¼ மணி நேரம் தாமதமாக கோவில்பட்டிக்கு வந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

பழுதடைந்த உயர் அழுத்த மின்கம்பி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் மாலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கோவில்பட்டியை அடுத்த வேலாயுதபுரம் ரெயில்வே தண்டவாளத்துக்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து விழுந்தது. பின்னர் அதனை ரெயில்வே ஊழியர்கள் இரவில் சரி செய்தனர். இதனால் அந்த வழியாக சென்ற ரெயில்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து கொல்லம் புறப்பட்ட அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 8.50 மணி அளவில் கோவில்பட்டியை அடுத்த வேலாயுதபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ஏற்கனவே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்த இடத்தில் மீண்டும் மின் இணைப்பு கிடைக்கப்பெறாமல் பழுது ஏற்பட்டது. இதையடுத்து அங்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது.

4¼ மணி நேரம் தாமதம்

இதுகுறித்து கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று, பழுதடைந்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பழுதடைந்த மின்கம்பியை தற்காலிகமாக சீரமைத்த பின்னர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு காலை 10 மணி அளவில் கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்து சென்றது.

வழக்கமாக அதிகாலை 5.45 மணிக்கு கோவில்பட்டிக்கு வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 4.15 மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். தொடர்ந்து வேலாயுதபுரத்தில் பழுதடைந்த மின்கம்பியை நிரந்தரமாக சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

டீசல் என்ஜின் மூலம்...

இதற்கிடையே அந்த வழியாக டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்ட நெல்லை-ஈரோடு-மயிலாடுதுறை இணைப்பு பாசஞ்சர் ரெயில் வழக்கம்போல் சென்றது. மின்சார ரெயில் என்ஜின் மூலம் இயக்கப்பட்ட ரெயில்களின் முன்பாக டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு, கோவில்பட்டி-சாத்தூர் இடையே இயக்கப்பட்டது. இதனால் மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்- நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை சாத்தூரில் இருந்து டீசல் என்ஜின் மூலம் கோவில்பட்டி வரையிலும் இயக்கப்பட்டது. அதேபோன்று நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் போன்றவை கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் வரையிலும் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான ரெயில் கள் சில மணி நேரம் தாமதமாக சென்றன.