தஞ்சை மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் கொள்ளை

தஞ்சை மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த பெண்ணிடம் ரூ.1¼ லட்சத்தை மர்ம நபர் கொள்ளையடித்துச்சென்று விட்டார்.

Update: 2018-09-11 23:00 GMT
தஞ்சாவூர்,

மருத்துவ மனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை மூடிவிட்டு தனது கைவரிசையை காட்டி விட்டு சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பூப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 33). அங்குள்ள பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கனகா(23). நிறைமாத கர்ப்பிணியாக உள்ள இவர், பிரசவத்துக்காக தஞ்சை-புதுக்கோட்டை சாலை காவேரி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இன்று(புதன்கிழமை) குழந்தை பிறந்து விடும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் கனகாவுடன் அவருடைய கணவர் கண்ணன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையிலேயே தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு கனகாவுடன் அவருடைய உறவினர்கள் தூங்கிக்கொண்டு இருந்தனர். மருத்துவமனையின் மேல் மாடியில் உள்ள அறை ஒன்றில் கண்ணன் தூங்கிக்கொண்டிருந்தார். கனகா படுத்திருந்த கட்டிலின் அடியில் இருந்த பையில், பிரசவ செலவுக்காக ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கண்விழித்துப்பார்த்த கனகா, படுக்கைக்கு அடியில் இருந்த பணப்பையை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். காணாமல் போன பணப்பை மருத்துவமனையின் மாடியில் இருந்தது. அதில் வைத்து இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன. ஆனால் பணம், செல்போன்கள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த கண்ணன் மற்றும் அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று அதிகாலை மருத்துவமனையின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்த மர்ம நபர், மருத்துவமனையின் முன்புறம் உள்ள கண்காணிப்பு கேமராவை துணியால் மூடி விட்டு பக்கவாட்டில் உள்ள மாடிப்படி வழியாக ஏறி மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர், பின்பக்க வாசலின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் துண்டு பேப்பரால் மூடி விட்டு கனகா படுத்திருந்த படுக்கைக்கு அடியில் இருந்த பை, அங்கிருந்த ஒரு செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் மாடி ஏறிச்சென்றுள்ளார்.

பின்னர் பையில் இருந்த ரூ.1 லட்சத்து 35 ஆயிரம், 2வெள்ளிக்கொலுசுகள், அதில் இருந்த கைக்கெடி காரம் ஆகியவற்றையும், கண்ணன் அருகில் இருந்த ஒரு செல்போனையும் தூக்கிக்கொண்டு மர்ம நபர் தலைமறைவாகி விட்டார். மர்ம நபர், மருத்துவமனைக்குள் நுழைந்து கண்காணிப்பு கேமராக்களை துணி, துண்டு பேப்பரால் மூடுவது அதில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் கண்ணன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர் களும் அங்கு வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான கைரேகைகளையும், அதில் இருந்த காட்சிகளையும் சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், செல்போன் களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்