பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் உதவி கலெக்டர் அறிவுறுத்தல்

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என உதவி கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2018-09-11 22:00 GMT
நாகப்பட்டினம்,

தமிழகத்தில் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. இதை உணவு விற்பனையாளர் மற்றும் இதர பகுதியினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உணவு பாதுகாப்பு ஆணையர் அமுதா உத்தரவின் பேரில், நாகை மாவட்ட உணவு பாதுகாப்புதுறை, நாகை நகராட்சி சார்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் உணவு விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நாகை இந்திய தொழிற்குழும தலைவர் ராமச்சந்திரன், ஓட்டல், டீக்கடை உரிமையாளர் சங்க தலைவர் முருகையன் முன்னிலை வகித்தார். நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் வரவேற்றார். கருத்தரங்கில் உதவி கலெக்டர் கமல் கிஷோர் கலந்துகொண்டு பேசினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாகையில் உள்ள அனைத்து டீக்கடை மற்றும் பலகாரக் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் டீ விற்பனை செய்யக்கூடாது. பலகாரங்களில் ஈ மொய்த்தல், தூசி படிதல் உள்ளிட்டவைகளில் இருந்து பாதுகாக்க கண்ணாடி பெட்டியில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். மேலும் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே குடிப்பதற்கு வழங்க வேண்டும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. எனவே மனித உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் நாகை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மகாதேவன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்