மாவட்ட செய்திகள்
இழப்பீடு வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி

இழப்பீடு வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வரை மோசடி செய்துவிட்டதாக கொடைக்கானல் பாதரச ஆலையில் வேலை பார்த்த ஊழியர்கள், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் புகார் மனு அளித்தனர்.
திண்டுக்கல், 


கொடைக்கானலில் தனியாருக்கு சொந்தமான பாதரச ஆலை இயங்கி வந்தது. அந்த ஆலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த ஆலை கடந்த 2001-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்தநிலையில் அந்த ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் 16 பேர் நேற்று திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சக்தி வேலிடம் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கொடைக்கானல் பாதரச ஆலை செயல்பட்டபோது, அங்கு சுமார் 1,100 பேர் பணி புரிந்தனர். அந்த ஆலை மூடப்பட்ட பின்னர், அங்கு பணியாற்றிய ஊழியர்கள் சிலர், ஆலையில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சினால் தாங்கள் பாதிக்கப்பட்டதாகவும் அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து பாதிப்புக்கு தகுந்தபடி 591 பேருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. மற்ற யாருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் வத்தலக்குண்டுவை சேர்ந்த ஒருவர், பாதரச முன்னாள் பணியாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்ததாக கூறி எங்களுக்கு அறிமுகமானார். அவர், தான் கோர்ட்டு மூலம் இழப்பீடு வாங்கி உள்ளேன். அதனால் யாரை சந்தித்தால் இழப்பீடு வாங்கலாம் என்று எனக்கு தெரியும். உங்களுக்கும் இழப்பீடு வாங்கி தருகிறேன். அதற்கு பணம் செலவாகும் என்று கூறினார். மேலும் அந்த ஆலையில் பணியாற்றிய 19 பேரை கொண்டு ஒரு குழு உருவாக்கினார்.

இதையடுத்து அந்த குழுவில் உள்ளவர்களிடம் இருந்து இழப்பீடுக்கு தகுந்தபடி, கடந்த 2006 முதல் 2017-ம் ஆண்டு இடைவெளியில் மொத்தம் ரூ.15 லட்சம் வரை வசூலித்தார். அதை அவர் நேரடியாக வாங்காமல், வேறு சிலர் மூலம் எங்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்தார். இழப்பீடு கிடைக்கும் என்று நம்பி நாங்கள் பணம் கொடுத்தோம். ஆனால் அவர் கூறியபடி இழப்பீடு பெற்றுத்தரவில்லை. இதனால் பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கிறார். எங்களை போல அவர் 50-க்கும் மேற்பட்டோரிடம், இதேபோல் இழப்பீடு வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்து பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஊர்வலத்தின்போது விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,200 சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஊர்வலத்தின்போது விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கூறினார்.
2. குற்ற செயல்களை தடுக்க 16 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள்
குற்ற சம்பவங்களை தடுக்க திண்டுக்கல் நகர் பகுதியில் 16 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கூறினார்.
3. வெடிபொருட்கள் இருப்பு குறித்து தகவல் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் இருப்பு குறித்து போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.