கடலாடி அருகே விறகு வியாபாரி வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை

கடலாடி அருகே விறகு வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-09-11 22:30 GMT
கலசபாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கடலாடி அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58), அவரது மனைவி வள்ளியம்மாள் (52) ஆகியோர் கடந்த 27-ந் தேதி அவர்களது விவசாய கிணற்றில் பிணமாக மிதந்தனர். கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றிய போது கணவன், மனைவி இருவருக்கும் நெற்றியில் வெட்டுக்காயம் இருந்தது. போலீசாரின் விசாரணையில் கணவன், மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கடலாடி பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த கொலைகளை செய்த மர்மநபர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் 5 பேர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இந்த கொலை வழக்கில் போலீஸ் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் நிலையில் தற்போது கடலாடி அருகே மேற்கண்ட தம்பதி கொலை பாணியில் விறகு வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

கடலாடியை அடுத்த சீராம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (40), விறகு வியாபாரி. இவர் நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக மிதந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேகரின் உடலை கைப்பற்றினர். அப்போது சேகரின் தலை நெற்றியில் வெட்டுக்காயம் இருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் கடந்த 27-ந் தேதி குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி கொலை செய்யப்பட்டது போலவே சேகரும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அக்கொலைகளை செய்த நபர்கள் தான், சேகரையும் கொலை செய்தார்களா? அல்லது சேகர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா?, சைக்கோ கொலையாளிகள் உலா வருகின்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கடலாடி பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்