பாபநாசத்தில் மரக்கிளை முறிந்து 3 பேர் காயம்; மோட்டார் சைக்கிள்கள் சேதம் போக்குவரத்து பாதிப்பு

பாபநாசத்தில் மரக்கிளை முறிந்து ரோட்டில் விழுந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார்சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

Update: 2018-09-11 22:30 GMT
விக்கிரமசிங்கபுரம், 

பாபநாசத்தில் மரக்கிளை முறிந்து ரோட்டில் விழுந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார்சைக்கிள்கள் சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மருத மரக்கிளை முறிந்தது

நெல்லை மாவட்டம் பாபநாசத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். இந்தநிலையில் பாபநாசம் கோவிலுக்கு சற்று எதிரே போலீஸ் பீட் இருக்கும் இடத்தின் அருகே மெயின் ரோடு ஓரத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மருதமரத்தின் கிளை திடீரென முறிந்து ரோட்டில் விழுந்தது. பயங்கர சத்தத்துடன் ஒடிந்து விழுந்த மரத்தின் கிளைகளை பார்ப்பதற்கு ஒரு பெரிய மரம் போல இருந்தது. மரக்கிளை முறிந்து விழுந்ததில் அப்பகுதியில் உள்ள 3 கடைகளின் மேற்கூரைகள் முழுவதும் சேதம் அடைந்தது. மேலும் அங்கு நின்று கொண்டிருந்த மின்கம்பமும் வளைந்து போனது.

3 பேர் காயம்

இச்சம்பவத்தின் போது அந்த வழியாக நடந்து வந்த சுத்தமல்லியை சேர்ந்த சேகர் (வயது40), பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்த முத்து மகன் முருகன் (32), விக்கிரமசிங்கபுரம் சங்கரபாண்டியபுரத்தை சேர்ந்த இருதயராஜ் (45) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீஸ் பீட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸ் ஏட்டு முருகையாவின் மோட்டார்சைக்கிள் உள்பட 4 மோட்டார்சைக்கிள்கள் பலத்த சேதம் அடைந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீசார், அம்பை தீயணைப்பு துறையினர், விக்கிரமசிங்கபுரம் மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்தனர். ரோட்டில் கிடந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ரோட்டின் குறுக்காக விழுந்து கிடந்த மரக்கிளையால் பாபநாசம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல வழியில்லாததால் பாபநாசத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள பஸ்நிறுத்தங்களில் பயணிகள் வெகு நேரம் பஸ்சுக்காக காத்து நின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்