திருவண்ணாமலை: 3½ அடி உயர குள்ளமான பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

திருவண்ணாமலையில் 3½ அடி உயர குள்ளமான பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அருண்சந்தர் என்று பெயரிட்டு தங்க சங்கிலியை கலெக்டர் அணிவித்தார்.

Update: 2018-09-11 23:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா கொளுந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 31), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (29), சுமார் 3½ அடி உயரம் கொண்டவர். இவர், மரபணு கோளாறால் 40 ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்படும் ‘அக்னொட்ரோபில்சியா’ எனும் எலும்பு வளர்ச்சி குறைந்து குள்ளமாக பிறக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்.

மாரியப்பனுக்கும், உமாமகேஸ்வரிக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் உமாமகேஸ்வரி கர்ப்பமானார். பிரசவ வலி காரணமாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு மகப்பேறு துறைத்தலைவர் ராஜலட்சுமி தலைமையில் சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 4-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் உமாமகேஸ்வரிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 2 கிலோ 200 கிராம் எடை இருந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று மருத்துவமனையில் நடந்தது. முன்னதாக மாவட்ட கலெக்டர் கந்தசாமி உமாமகேஸ்வரிக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

அவர் அந்த ஆண் குழந்தைக்கு அருண்சந்தர் என பெயரிட்டார். மேலும் அவர் தனது சொந்த செலவில் 7 கிராம் கொண்ட தங்க சங்கிலி அணிவித்தார். டாக்டர்களின் சாதனையை கொண்டாடும் விதமாக ‘கேக்’ வெட்டப்பட்டது. பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணையும், பிறப்பு சான்றிதழும் கலெக்டர் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் எலும்பு வளர்ச்சி குறையுள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த குழந்தை நலமாக உள்ளது. டாக்டர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்’ என்றார்.

பிரசவம் பார்த்த டாக்டர் ராஜலட்சுமி கூறுகையில், ‘உமாமகேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தோம். வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. அதற்காக மயக்கவியல், எலும்பு பிரிவு டாக்டர்கள் மற்றும் சிறப்பு குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். அறுவை சிகிச்சையின் போது உமாமகேஸ்வரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் அது சீரானது. எங்களது முயற்சியில் வெற்றி பெற்றோம். சில ஆண்டுகள் கழித்து தான் அந்த குழந்தைக்கு மரபணு கோளாறு உள்ளதா? என்று கண்டறிய முடியும். அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும், சிறந்த டாக்டர்களும் இருந்ததால் இந்த முயற்சியில் நாங்கள் இறங்கினோம்’ என்றார்.

பேட்டியின் போது டீன் நடராஜன், மருத்துவ அலுவலர் ஸ்ரீதர் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்