நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: துணைஇயக்குனர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை நடவடிக்கையில் துணைஇயக்குனர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2018-09-11 22:35 GMT
வேலூர்,

வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து துணை இயக்குனர், அலுவலக மேற்பார்வையாளர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளித்தல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக வந்த தகவலைதொடர்ந்து கடந்த 7-ந் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் துணை இயக்குனர் சுப்பிரமணியன் வள்ளலார் டபுள்ரோடு பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்ததும் தெரியவந்தது. அந்த வீட்டிலும் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

இந்த நிலையில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் தனியாக அலுவலகம் நடத்தியது தொடர்பாக துணை இயக்குனர் சுப்பிரமணியன், அலுவலக மேற்பார்வையாளர் சதாசிவம் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்