மாவட்ட செய்திகள்
பெங்களூருவில்திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கொன்று துணிக்கடை உரிமையாளர் தற்கொலை

பெங்களூருவில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கொன்று துணிக்கடை உரிமையாளர் தற்கொலை செய்துள்ளார்.
பெங்களூரு, 

பெங்களூருவில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கொன்று துணிக்கடை உரிமையாளர் தற்கொலை செய்துள்ளார். இவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

துணிக்கடை உரிமையாளர்

பெங்களூரு டொம்லூரை சேர்ந்தவர் ரவீந்திரா (வயது 69). இவர் விவேக் நகர் வண்ணார்பேட்டையில் துணிக்கடை நடத்தி வருவதுடன், ராணுவ வீரர்களுக்கு தேவையான உடைகளையும் தைத்து கொடுத்து வந்தார். இவருடைய துணிக்கடையில் குடகு மாவட்டத்தை சேர்ந்த உமா (60) என்பவர் வேலை செய்து வந்தார். உமா, துணிக்கடையின் பின்புறம் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தார். ரவீந்திரா, உமாவுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ரவீந்திராவின் கடை பூட்டப்பட்டு கிடந்தது., நேற்று முன்தினம் இரவு துணிக்கடையில் இருந்து தூர்நாற்றம் வீசியது. இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக விவேக் நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் துணிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

கடனை திரும்ப செலுத்த முடியாததால்...

அப்போது, அழுகிய நிலையில் ரவீந்திரா, உமா ஆகியோர் பிணமாக கிடந்தனர். ரவீந்திரா தூக்கில் பிணமாக தொங்கினார். உமா தரையில் பிணமாக கிடந்தார். இதனால் உமாவை கத்தி அல்லது அரிவாளை பயன்படுத்தி கொலை செய்துவிட்டு ரவீந்திரா தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் ரவீந்திராவின் வீட்டை ஜப்தி செய்ய வங்கி சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டதாகவும், இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், ரவீந்திரா எதற்காக உமாவை கொலை செய்தார் என்பதில் மர்மம் நீடிக்கிறது. இதுதொடர்பாக விவேக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.