மாவட்ட செய்திகள்
மந்திரி பதவி விவகாரத்தில் காங். எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடிகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல்பா.ஜனதாவினர் அவசர ஆலோசனை

மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பெங்களூரு,

மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதாவினர் அவசர ஆலோசனை நடத்தினர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

கருத்து வேறுபாடு

இதில் காங்கிரஸ் கட்சியில் மந்திரி பதவிகளை கைப்பற்றும் விவகாரத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் கட்சியில் தற்போது கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. பெலகாவி காங்கிரஸ் கட்சியில் சகோதரர்களான மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் முன்னாள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. ஆகியோர் செல்வாக்கு மிகுந்த தலைவர்களாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் அந்த மாவட்டம் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பெலகாவி மாவட்டத்தில் ரமேஷ் ஜார்கிகோளி, சதீஸ் ஜார்கிகோளி ஆகியோருக்கு எதிராக லட்சுமி ஹெப்பால்கர்் எம்.எல்.ஏ. செயல்படுகிறார். பெலகாவி நிலவள வங்கி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலின்போது, மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. ஆகியோரின் அணிகள் இடையே கடும் போட்டி எழுந்தது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது பகிரங்கமாக வெளிப்பட்டது.

மந்திரி டி.கே.சிவக்குமாரின் ஆதரவு

இதில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு கண்டனர். நிலவள வங்கி தலைவர் பதவிக்கான தேர்தலில் லட்சுமி ஹெப்பால்கரின் ஆதரவாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து ஜார்கிகோளி சகோதரர்கள் மற்றும் லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. இடைேயயான கருத்து வேறுபாடு அதிகரித்துவிட்டது. லட்சுமி ெஹப்பால்கருக்கு மந்திரி டி.கே.சிவக்குமாரின் ஆதரவு உள்ளது.

பெலகாவி காங்கிரஸ் கட்சி விவகாரங்களில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடுவதை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் சதீஸ் ஜார்கிகோளி ஆகியோர் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இதனால் பெலகாவி மாவட்ட காங்கிரசில் உட்கட்சி பூசல் தீவிரம் அடைந்துள்ளது.

கூட்டணி ஆட்சிக்கு சிக்கல்

இதன் காரணமாக மந்திரி ரமேஷ் ஜார்கிேகாளி மற்றும் அவருடைய சகோதரர் சதீஸ் ஜார்கிகோளி ஆகியோர் காங்கிரசை விட்டு விலக உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் மேலும் 12 எம்.எல்.ஏ.க்கள் விலக இருப்பதாக கூறப்படுகிறது. இது காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி நேற்று காலை நேரில் சந்தித்து பேசினார். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடுவதை தடுக்க வேண்டும் என்று மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

மந்திரி பதவி வழங்கக்கூடாது

மேலும் லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ.வுக்கு எக்காரணம் கொண்டும் மந்திரி பதவி வழங்கக்கூடாது, மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பதவியில் இருந்து லட்சுமி ஹெப்பால்கரை நீக்க வேண்டும், லட்சுமி ஹெப்பால்கரின் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்கக்கூடாது, நாடாளுமன்ற தேர்தலில் பெலகாவி தொகுதியில் போட்டியிட நாங்கள் கூறும் நபருக்கே டிக்கெட் வழங்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் நாங்கள் முன்வைத்துள்ள இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே அமைதியாக இருப்போம் இல்லாவிட்டால் நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்வோம் என்றும், இதனால் ஆட்சிக்கு ஆபத்து வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் அவர் கூறியதாக தெரிகிறது.

ராகுல் காந்தியை சந்திக்க ஏற்பாடு

இதற்கு பதிலளித்த பரமேஸ்வர் மற்றும் தினேஷ் குண்டுராவ், நீங்கள் கூறியுள்ள இந்த பிரச்சினைகளை கட்சி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்க முயற்சி செய்கிறோம் என்று கூறி உறுதியளித்தனர். அத்துடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்று ரமேஷ் ஜார்கிகோளி கெடு விதித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வருகிற 16-ந் தேதி ஜார்கிகோளி சகோதரர்கள் முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியில் ஜார்கிகோளி சகோதரர்கள் திடீரென போர்க்கொடி உயர்த்தி இருப்பதால், கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் நாட்களில் கர்நாடக அரசியலில் பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடியூரப்பா அவசர ஆலோசனை

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் எழுந்துள்ளதால், கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று கட்சி நிர்வாகிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.

முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பெலகாவி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசித்த எடியூரப்பா, ஜார்கிகோளி சகோதரர்கள் பா.ஜனதாவுக்கு வந்தால் அவர்களுக்கு எந்த மாதிரியான பதவிகளை வழங்குவது, அவர்கள் கட்சிக்கு வருவதால் பா.ஜனதா மேலும் பயன் அடையுமா? என்பது குறித்து ஆலோசனைகளை கேட்டு பெற்றார்.

தயாராக இருக்க அறிவுரை

அப்போது பேசிய எடியூரப்பா, எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கும்படியும் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார். மேலும் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் மாநில அளவிலான நிர்வாகிகள் தொடர்பில் இருக்கும்படியும், அவர்களை வேறு கட்சிகளுக்கு மாறாமல் பாதுகாக்கும்படியும் நிர்வாகிகளுக்கு எடியூரப்பா அறிவுறுத்தி இருக்கிறார்.