திறந்தவெளி சிறைகளில் பெண் கைதிகளும் தங்குவதற்கு விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும்

பெண் கைதிகளும் திறந்தவெளி சிறைகளில் தங்கும் வகையில் சிறை விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-11 23:09 GMT
மதுரை, 

மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் சிறப்பு சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 சப்-ஜெயில், 3 திறந்தவெளி சிறைகள் உள்ளிட்ட சிறைகள் உள்ளன. இங்கு 4,966 தண்டனை கைதிகளும், 9,156 விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். திறந்தவெளி சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்பு ஏற்படும். சிங்காநல்லூர், சேலம், சிவகங்கை காளையார்கோவில் ஆகிய ஊர்களில் திறந்தவெளி சிறை உள்ளது. இந்த 3 திறந்தவெளி சிறைகள் ஆண் கைதிகளுக்கானது. தமிழகத்தில் பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறைகள் இல்லை. விசாரணை கைதிகள், பெண் கைதிகள் உள்ளிட்டோர் திறந்தவெளி சிறைகளில் தங்குவதற்கு தகுதி இல்லை என சிறை விதிகள் கூறுகிறது.

எனவே பெண் கைதிகளை திறந்தவெளி சிறைகளில் தங்க வைப்பதற்கு ஏதுவாக சிறைவிதிகளில் திருத்தம் செய்ய உரிய உத்தரவு பிறபிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறபித்த உத்தரவு வருமாறு:-

சட்டம் அனைவருக்கும் சமம். அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் சமமானது. ஆண், பெண் பாகுபாடு பார்க்கக் கூடாது. சிறை விதிகள் 1983-ன்படி கைதி என்ற வார்த்தை ஆண், பெண் பாகுபாடு பார்க்கவில்லை. எனவே தமிழகத்தில் திறந்தவெளி சிறையில் தங்குவதற்கு பெண்களும் தகுதியானவர்கள் என சிறை விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என்ற பாகுபாடு பார்க்காமல் இரு வகை கைதிகளும் திறந்தவெளி சிறையில் தங்கும் வகையில் சிறை விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும். 12 வாரங்களுக்குள் திறந்தவெளி சிறை தொடர்பான சிறை விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக உள்துறை செயலர் மற்றும் தமிழக சிறை துறைக்கும் உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு 12 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். 

மேலும் செய்திகள்