திருப்பூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது

திருப்பூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-11 23:24 GMT
திருப்பூர்,

அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர்களின் கைது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் ஸ்ரீநகரை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 30). இவர் பொம்மநாயக்கன்பாளையத்தில் ஓட்டல் வைத்துள்ளார். மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். திருப்பூர் மாநகராட்சி 28-வது வார்டு அ.தி.மு.க. இளைஞர் அணி செயலாளராகவும் இருந்தார். நேற்று முன்தினம் மாலை இளங்கோவனுக்கும், திருநீலகண்டபுரத்தை சேர்ந்த தாமோதரன் மற்றும் அவருடைய நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இளங்கோவன் தனது நண்பரான ஸ்ரீநகரை சேர்ந்த காளியப்பனுக்கு(31) செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார். அவரும் திருநீலகண்டபுரம் சென்று அங்கிருந்தவர்களிடம் சமாதானம் செய்தார். பின்னர் காளியப்பன் ஒரு மோட்டார் சைக்கிளிலும், இளங்கோவன் அவருடைய ஸ்கூட்டரிலும் ஸ்ரீநகர் நோக்கி புறப்பட்டனர். திருநீலகண்டபுரம் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது தாமோதரன் தனது நண்பர்கள் 2 பேருடன் வந்து வழிமறித்து, சாக்கு தைக்கும் கூர்மையான ஊசியால் காளியப்பன், இளங்கோவனை குத்தினார் கள். இதில் காளியப்பனுக்கு நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டது. முகத்தில் குத்துப்பட்ட இளங்கோவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து இளங்கோவனை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இளங்கோவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளங்கோவனின் உடல் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை அவருடைய உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். ஆனால் இளங்கோவனின் உடலை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியிலேயே பிரேத பரிசோதனை செய்து இளங்கோவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரியின் முன்பு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள், அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்று டாக்டர்கள் விளக்கி கூறியதை தொடர்ந்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். பின்னர் இளங்கோவின் உடல் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தாமோதரனின் நண்பர்களான போயம்பாளையத்தை சேர்ந்த 17 வயது வாலிபரையும், எம்.எஸ்.நகரை சேர்ந்த 17 வயது வாலிபரையும் போலீசார் நேற்று பிடித்தனர். இவர்கள் இருவரும் பனியன் நிறுவன தொழிலாளிகள் ஆவார்கள். பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து போலீசார் கூறும்போது, தாமோதரனின் உறவினருக்கு இளங்கோவன் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார்.

அதுதொடர்பாக தாமோதரனுக்கும், இளங்கோவனுக்கும் பிரச்சினை ஏற்பட்டு தாமோதரனை இளங்கோவன் தாக்கியுள்ளார். இதுகுறித்து தாமோதரன், 17 வயதுடைய தனது நண்பர்கள் 2 பேரிடம் கூறியுள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து சென்று இளங்கோவனை கொலை செய்துள்ளனர் என்றனர்.

இதைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கில் 17 வயதுடைய தொழிலாளிகள் 2 பேரையும் திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தாமோதரனை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்