“கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் குழந்தையை கொன்றேன்” - கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

“கணவர் எப்போதும் வாட்ஸ்-அப்பில் மூழ்கி இருந்ததால் அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் குழந்தையை கொன்றேன்” என்று கைதான பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2018-09-11 23:31 GMT
மங்கலம்,

குழந்தை சிவன்யாஸ்ரீயை கொலை செய்த தாயார் தமிழ் இசக்கி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். எனது பெற்றோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூரை அடுத்த சாமளாபுரத்திற்கு குடிவந்தனர். நான் அந்த பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்தேன். அப்போது அந்த கடைக்கு செல்போன் ரீசார்ஜ் செய்ய நாகராஜ் வருவார். அப்போது அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடையில் எங்களுக்குள் காதலாக மலர்ந்தது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு சிவன்யாஸ்ரீ என்ற குழந்தை பிறந்தாள்.

நாகராஜ் அந்தபகுதியில் உள்ள தனியார் மில்லில் மூடை தூக்கும் வேலை செய்து வருகிறார். நான், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். தினமும் வேலைக்கு செல்லும் நாகராஜ், இரவு தாமதமாகத்தான் வீட்டிற்கு வருவார். அப்போது நான் போன் செய்தால் போனை எடுத்து பேச மாட்டார். மேலும் செல்போனில் அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் கூறும். அப்போது தான் அவர் வேறு ஒருவருடன் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பேசுவது தெரியவந்தது. இதனால் அவருக்கும் வேறு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருக்குமோ? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் தினமும் வீட்டிற்கு வந்ததும், அவருடன் சண்டைபோடுவேன். அப்போது எனது மாமியார் தலையிட்டு சமரசம் செய்வார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நாங்கள் 3 பேரும் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தோம். உடனே நாகராஜ் வெளியில் சென்றார். அப்போது இரவு 7 மணிக்கு நானும், குழந்தை சிவன்யாஸ்ரீயும் வீட்டில் இருந்தோம். இதற்கிடையில் வெளியூர் சென்று இருந்த எனது மாமியார் தனலட்சுமி வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் குழந்தைக்கு புதுத்துணியை அணிவித்து, பால் கொடுத்து தூங்க வைத்து விட்டு வெளியே சென்று விட்டார். அப்போது நான் வைத்து இருந்த ஸ்மார்ட் போன் மூலம் எனது கணவர் நாகராஜை தொடர்பு கொள்ள முயன்றேன். 6 முறை தொடர்பு கொள்ள முயன்றும் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. ஆனால் யாருடனோ வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு பேசுவது மட்டும் தெரியவந்தது. இதனால் எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

அவருக்காக குடும்பத்தை உதறிவிட்டு வந்தேன். ஆனால் நான் இனி நடுத்தெருவுக்கு சென்று விடுவேனோ? என்று பயம் ஏற்பட்டது. எனவே இனி இந்த உலகில் வாழ வேண்டாம் என்று, குழந்தையை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி முதலில் ஒரு குச்சியை எடுத்து குழந்தையின் தலையில் ஓங்கி அடித்தேன். இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதது. பின்னர் குழந்தையின் வாயை பொத்தி அருகில் இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தேன். 5 அடி உயரம் கொண்ட அந்த பிளாஸ்டிக் தொட்டியில் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. இதனால் குழந்தை மூச்சுவிட திணறியது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது.

உடனே குழந்தையை வெளியில் தூக்கி கட்டிலில் போட்டு விட்டு நானும், தற்கொலை செய்ய முடிவு செய்து கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றேன். அதற்குள் எனது கணவர் நாகராஜ் வந்து விட்டார்.

இதனால் தற்கொலை முயற்சியை கைவிட்டு, அவசரமாக தூக்குப்போட பயன்படுத்திய சேலையை பீரோவில் வைத்து விட்டு கதவை திறந்தேன். குழந்தை வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து விவரத்தை என்னிடம் கேட்டார். அப்போது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டிற்குள் புகுந்து குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து விட்டு, என்னையும் தாக்கி விட்டு சென்று விட்டான் என்று கூறினேன். இதை உண்மை என எனது கணவர் நம்பினார். உடனே நானும், அவரும் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றோம். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக சொன்னார்கள். அதன்படி ஆம்புலன்சில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் எனது மாமியார் மங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் என்னை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். முதலில் குழந்தையை கொல்லவில்லை என்று மறுத்தேன். ஆனால் கணவர் மீதுள்ள சந்தேகத்தில் நான்தான் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன்.

இவ்வாறு போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். கணவர் மீது உள்ள சந்தேகத்தால் 2½ வயது குழந்தையை தாயே தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்மார்ட் போனால் வந்த வினை

தற்போது குடும்பங்களில் ஸ்மார்ட் போன்களால் தான் பிரச்சினை உருவாகிறது. கணவன் செல்போனில் பிசியாக இருந்தால் மனைவிக்கும், மனைவி செல்போனில் பிசியாக இருந்தால் கணவனுக்கும் சந்தேகம் ஏற்படுகிறது.

அதுபோல்தான் நாகராஜூம், தமிழ் இசக்கியும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 மாதமாக நாகராஜின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இரவு நேரத்தில் வீட்டிற்கு தாமதமாக வருவதும், யாருடனோ செல்போனில் ஷாட்டிங் செய்வதும் தமிழ் இசக்கிக்கு தெரியவந்தது.

மேலும் கடந்த ஒரு மாதமாக செல்போனை யாரும் திறந்து பார்க்காதவாறு அவர் லாக் செய்து வைத்துள்ளார். இது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியதால் குழந்தையை கொன்று விட்டு தமிழ் இசக்கி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்