கானலாகும் காந்தி விரும்பிய கிராம சுயராஜ்யம்!

கேரளத்தைப் புரட்டிப்போட்ட வெள்ளச் சேதம், காவிரியில் வெள்ளப்பெருக்கு, முன்னணி தலைவர்களின் மரணம் போன்ற பரபரப்புகளுக்கு மத்தியில் நீதிமன்றத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்தான விவாதங்களை நாம் கவனிக்கத் தவறி விட்டோம்.

Update: 2018-09-12 03:10 GMT
அடிப்படை ஜனநாயகத்துக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறது உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்பட 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. 655 மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இடங்களும் உள்ளன.

இவற்றில் மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் என்று 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதவி வகித்தனர். இவர்களின் பதவிக் காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலை சில பல காரணங்களுக்காக தள்ளிப்போட்டுக்கொண்டே செல்கிறார்கள். இது மக்கள் மீது தொடுக்கப்படும் அராஜகம் என்றே சொல்லவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கவில்லை என்று நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றது. இதற்கிடையே உள்ளாட்சிப் பணிகளை நிர்வாகம் செய்யும் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை டிசம்பர் மாதம் இறுதி வரை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது, டிசம்பர் வரை தேர்தல் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

உள்ளாட்சித்தேர்தல் நடத்த வேண்டும் என்று ஏன் பதறுகிறோம்? பஞ்சாயத்துராஜ் சட்டம் வந்தபிறகு தேர்தல் நடைபெறாத ஒரே மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது! நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் சட்டமியற்றும் அமைப்புகள் மட்டுமே. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள்தான் அதனைச் செயல்படுத்தும் அமைப்புகள்.

மக்களாட்சி முறையில் மக்களின் நேரடி பங்கேற்பும் மக்களின் கருத்தினைப் பிரதிபலிப்பதும் முக்கிய அம்சம். உள்ளாட்சி நிர்வாகமானது மக்களோடு இணைந்து செயல்படக்கூடியது. இங்குதான் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். கிராமப்பொருளாதாரம் மேலோங்கவும், வறுமை நீங்கவும் கிராம அளவிலான ஆட்சிமுறைதான் உறுதுணையாக இருக்கும். உள்ளாட்சி நிர்வாகமானது பரவல்முறை நிர்வாகத்துக்கு வழிவகுப்பதோடு தலைமைத்துவத்தையும் பரவலாக்க வழிவகுக்கிறது.

நமது தேசத்தில் உள்ள ஒட்டு மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 5 ஆயிரம் ஆகும். ஒரு எம்.எல்.ஏ. சுமார் ஒன்றரை லட்சம் மக்களின் பிரதிநிதி என்றால் உள்ளாட்சிகளின் வாயிலாக 500 நபர்களுக்கு ஒரு மக்கள் பிரதிநிதியென்ற பரவல்முறை நிர்வாகத்துக்கு வழிவகுக்கிறது. ஆகவே உள்ளாட்சி நிர்வாகம் ஒரு நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியது. எனவே உள்ளாட்சிக்கு தேர்தல் அவசியம்.

இரண்டாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிக்கொண்டே போவதால், கடந்த மே மாதம் கோடையில் தண்ணீரின்றி தவித்த கிராமங்கள் பல. அந்த கிராமமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டுவிட்டு நீருக்காக அவஸ்தையோடு காத்திருந்ததைப் பார்த்தோம். தண்ணீர்வந்தால் கொடுப்போம் என்று அதிகாரிகள் அளித்த பதிலால் மக்கள் துவண்டுபோனார்கள்.

அதேநேரத்தில் மக்களால் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள், தலைவர்கள் இருந்தால் அவர்களை மக்கள் உலுக்கி எடுத்திருப்பார்கள். அந்த தலைவரும் எங்கேயாவது முட்டிமோதி தண்ணீர் கிடைக்க வழி செய்திருப்பார்.

கடந்தமுறை டெங்கு காய்ச்சல் விஸ்வரூபம் எடுத்ததற்கு தேர்ந் தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப்பிரதிநிதிகள் இல்லாததே காரணம். அவர்கள் இருந்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பார்கள். சுகாதாரத்தை மேம்படுத்தியிருப்பார்கள். இதையெல்லாம் புரிந்துக்கொள்ளாத அரசும் தேர்தல் ஆணையமும்தான் நமக்கு எதிராக நிற்கின்றன.

அடுத்து ஒரு பெரிய ஆபத்து வடகிழக்குப் பருவமழை என்ற பெயரில் வர வாய்ப்பிருக்கிறது. இந்தமுறை இம்மாத (செப்டம்பர்) நடுவிலேயே மழைக் கொட்டத் தொடங்கும் என்கிறார்கள். இந்த மழையை எதிர்கொள்ள கிராமத்தில் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? அதிகாரிகளால் மட்டுமே அனைத்துக் கிராமத்திலும் நடவடிக்கை மேற்கொண்டுவிடமுடியுமா? யோசிக்க வேண்டிய தருணமிது. காரணம் ஆபத்து அடுத்துக் காத்திருக்கிறது.

உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாததால் கிராமங்களுக்கான மத்திய அரசின் நிதி கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம், துப்புரவுப்பணி போன்றவற்றில் ஏற்படும் இடையூறுகளைக் கூட பஞ்சாயத்து பிரதிநிதிகள் இல்லாததால் யாரிடம் சொல்வது என்று மக்கள் குழம்பி வருகிறார்கள். இது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்று பஞ்சாயத்து மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியான நா.ஜானகிராமன் வெளிப்படையாக தெரிவித்தள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு அரசுக்கு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. காரணம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரமும் அந்தஸ்தையும் வழங்கி ஒரு இயல்பான கிராம நிர்வாகத்திற்கு வழியேற்படுத்தும் போதுதான் நமது தேசத்தின் வளர்ச்சியும், மகாத்மா காந்தி விரும்பிய உண்மையான கிராம சுயராஜ்யத்தையும் படைக்க முடியும்.

- ஐவி.நாகராஜன், மாநிலக்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி

மேலும் செய்திகள்