மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.;
மதுரை,
மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என்பது தான் நமது அனைவரின் விருப்பமாக இருந்தது. இந்த விருப்பத்திற்கேற்ப மத்திய அரசும் மதுரை தோப்பூரில் அமைக்கப்படும் என்று அறிவித்தது. மேலும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு வசதியாக மாநில அரசு சாலை வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும், நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியது.
இதைத் தொடர்ந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் உத்தரவின் பேரில் இதற்கான பணிகள் மிக துரிதமாக நடந்தன. தோப்பூரில் 262 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு நிலத்திற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் மூலம் குடிநீர் வழங்கவும், சாலை வசதி செய்து தரவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு கேட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்து, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது குறித்த அறிவிப்பை மத்திய மந்திரிசபை மூலம் வெளியிடுவார்கள். அதன்பின் உடனடியாக கட்டுமான பணிகள் தொடங்கும். ஒரு திட்டத்தை தொடங்குவதற்கு அரசு சார்பில் கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கமான நடைமுறை இது. ஆனால் அதற்குள், மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய அரசு அனுமதியே தரவில்லை என்ற பாணியில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த திட்டத்தில் எந்த காலதாமதமும் இல்லை. எந்த தடையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.