மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்: சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் சாவு
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனைவாரி கிராமத்தை சேர்ந்தவர் அரசன் மகன் மேகநாதன்(வயது 20). இவர் சம்பவத்தன்று தனது தாய் ஜோதியுடன்(45) ஒரு மோட்டார் சைக்கிளில் திருவெண்ணெய்நல்லூரில் இருந்து ஆணைவாரிக்கு புறப்பட்டார். பெரியசெவலை-மடப்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று மேகநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய மேகநாதன் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேகநாதன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.