3 வயது சிறுமியை கடித்து குதறிய கரடி
நாட்டறம்பள்ளி அருகே வீட்டுக்குள் புகுந்த கரடி 3 வயது சிறுமியை கடித்து குதறியது. அந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.;
நாட்டறம்பள்ளி,
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் கிராமம் தமிழக - ஆந்திர மாநில எல்லை பகுதியில் உள்ளது. இப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வனப்பகுதியையொட்டி இருக்கிறது. நேற்று காலை கொத்தூர் காப்புக் காட்டில் தாய் கரடி ஒன்றும், அதன் குட்டி ஒன்றும் சுற்றித் திரிந்தது. இந்த கரடிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சின்னதம்பி என்பவருக்கு சொந்தமான விளை நிலத்தில் திடீரென புகுந்தது.
இதனை கண்டதும், அங்கு விவசாய பணியில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் ஊரில் உள்ள இளைஞர்களுக்கு தகவல் தெரியவரவே, அவர்கள் ஒன்று திரண்டு கரடிகளை விரட்டினர்.
அப்போது தாய் கரடி, அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது. அதன் குட்டி திசைமாறி குடியிருப்பு பகுதியை நோக்கி ஓடியது. பின்னர் அங்குள்ள சலவை தொழிலாளி குமாரின் வீட்டிற்குள் அந்த கரடி புகுந்தது.
வீட்டில் இருந்த குமாரின் மகள் கயல்விழி (வயது 3) என்ற சிறுமியை கழுத்து, கைகளில் கரடி கடித்து குதறியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த கரடி தப்பி ஓடி மற்றொரு வீட்டுக்குள் புகுந்து விட்டது. அந்த வீட்டை பொதுமக்கள் பூட்டி அதனை சிறை வைத்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த கயல்விழியை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கரடி குட்டியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி குட்டி கரடி இருந்த வீட்டில் கூண்டில் இரையை வைத்து, அதனை நைசாக பிடித்தனர். பிடிபட்ட அந்த குட்டி கரடிக்கு 1 வயது இருக்கும் என தெரிகிறது. பிடிபட்ட குட்டி கரடியை அடர்ந்த காட்டு பகுதியில் கொண்டு விடுவதற்கு வனத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தப்பி ஓடிய தாய் கரடி தற்போது காப்புக்காடு பகுதிக்குள் ஓடிவிட்டது. இருப்பினும் அந்த கரடி எப்போதும் வேண்டுமானாலும் விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். மேலும் தனியாக யாரும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தாய் கரடி மீண்டும் விளைநிலம், குடியிருப்பு பகுதியில் நுழையாமல் இருக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.