ஆண்டிப்பட்டி அருகே அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள்; ஆர்.டி.ஓ. நேரில் விசாரணை

ஆண்டிப்பட்டி அருகே அங்கன்வாடி மையத்துக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்ப மறுத்து வருவது குறித்து பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயபிரித்தா நேரில் விசாரணை நடத்தினார்.;

Update:2018-10-01 04:15 IST

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் படித்து வந்தனர். அதிகமான குழந்தைகள் படித்த இந்த அங்கன்வாடி மையம் 2 ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி புதிதாக அதே பகுதியில் உள்ள பிள்ளைமுகன்பட்டி என்ற கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

புதிதாக தொடங்கப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தில், 54 குழந்தைகள் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் புதிதாக அங்கன்வாடி மையம் தொடங்கப்பட்ட பகுதி ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். இதனால் அந்த அங்கன்வாடி மையத்துக்கு பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுப்பதாக புகார் எழுந்தது.

இதன்காரணமாக புதிதாக தொடங்கப்பட்ட அங்கன்வாடி மையத்துக்கு 20–க்கும் குறைவான குழந்தைகளே வருகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் குழந்தைகளை அனுப்பும்படி பலமுறை கூறியும் குழந்தைகளை அனுப்ப மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே பிள்ளைமுகன்பட்டி அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகள் சென்று படிக்க தேவையான நடவடிக்கையை அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பிள்ளைமுகன்பட்டி கிராமத்தில் பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயபிரித்தா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

முதலில் அங்கன்வாடியில் பணியாற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் பிள்ளைமுகன்பட்டி, இந்திராநகர், திம்மரசநாயக்கனூர் பகுதி மக்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினர். அப்போது தங்கள் பகுதியிலேயே அங்கன்வாடி இருந்தால் மட்டுமே பிள்ளைகளை அனுப்புவோம் என்றும், தற்போதுள்ள பிள்ளைமுகன்பட்டி தூரமாக உள்ளதாக புகார் தெரிவித்தனர். மக்களின் கருத்துகளை கேட்ட பின்னர் ஆர்.டி.ஓ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார். விசாரணையின் போது ஆண்டிப்பட்டி தாசில்தார் அர்ச்சுனன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்