கோவில்பட்டி அருகே பயங்கரம் பெண் வெட்டிக் கொலை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கோவில்பட்டி அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆடு மேய்க்கும் தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 53). இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (50). இவர்கள் வீட்டில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தனர். இவர்கள் 2 பேரும் இந்த ஆடுகளை தினமும் காலையில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துவிடுவார்கள்.
இந்த நிலையில் நேற்று காலையில் பாக்கியலட்சுமி மட்டும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். ஆனால் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. ஆனால் ஆடுகள் அனைத்தும் வீட்டிற்கு வந்து விட்டது. இதனால் சந்தேகம் அடைந்த முத்துராமலிங்கம் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் பாக்கியலட்சுமியை தேடிப்பார்த்தனர்.
பிணமாக கிடந்தார்
அப்போது, ஊருக்கு அருகே உள்ள கண்மாயில் பாக்கியலட்சுமி கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தர்மலிங்கம், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், பாக்கியலட்சுமி உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாக்கியலட்சுமியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்று இருப்பது தெரியவந்தது. மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் மர்ம நபர்கள் பிடிபட்ட பின்னரே கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். கொலை செய்யப்பட்ட பாக்கியலட்சுமிக்கு காளியப்பன், செல்வகுருசாமி ஆகிய மகன்கள் உள்ளனர். கோவில்பட்டி அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.