அனைத்து மக்களுக்கும் கட்டணமில்லா மருத்துவ சேவை - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்

பொதுசுகாதார நலவாழ்வு மையம் மூலம் அனைத்து மக்களுக்கும் கட்டமில்லா மருத்துவ சேவை வழங்கப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.;

Update:2018-10-01 04:00 IST

சேவூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சேவூரில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் நலவாழ்வு மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கே.பழனிசாமி தலைமை தாங்கினார். விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுசுகாதார நலவாழ்வு மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:–

அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் பொது சுகாதார நலவாழ்வு மையங்களாக மாற்றப்படுகிறது. அதன்படி சேவூரில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. மேலும் சேவூர் சுற்றுவட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த 5 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 25 துணை சுகாதார நிலையங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் கூடுதலாக ஒரு செவிலியர் நியமித்து அவர்கள் மூலம் நோயாளிகளுக்கு ரத்தபரிசோதனை, கண் மருத்துவம், பல் சிகிச்சை, மன நலம், குடும்பநலம், தாய்சேய்நலம், பச்சிளம்குழந்தைகள் நலம் உள்பட 12 விதமான ஒருங்கிணைந்த நலவாழ்வு சேவைகள் வழங்கப்படும். அவசர முதல் உதவி சிகிச்சை அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதே நல்லவாழ்வு திட்டத்தின் நோக்கமாகும். நோயாளிகளுக்கு மேல் பரிந்துரை செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புறங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் மருத்துவ சேவைகிடைக்க அதற்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தினால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருத்துவ தேவைகள் அவர்களது வீட்டின் அருகிலேயே இலவசமாக கிடைக்கும். இதனால் மருத்துவத்திற்காக ஆகும் செலவு குறையும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மக்களுக்கும் கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்குவதே ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்