கார் டிரைவர் கொலையில் ரவுடிகள் 3 பேர் கைது

வேலூர் பாலாற்றில் கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வேலூரை சேர்ந்த 3 ரவுடிகளை அணைக்கட்டில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். “கொலைசெய்து விடுவதாக மிரட்டியதால் தீர்த்து கட்டினோம்” என போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;

Update:2018-10-01 03:15 IST
காட்பாடி, 

காட்பாடி காங்கேயநல்லூரில் இருந்து சத்துவாச்சாரிக்குச் செல்லும் பாலாற்றில் கடந்த 25-ந் தேதி வேலூர் சைதாப்பேட்டை சின்னகவுண்டர் தெருவைச் சேர்ந்த கார் டிரைவரான பிச்சைபெருமாள் (வயது 31) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க காட்பாடி இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட பிச்சைபெருமாளின் உறவினர்கள், நண்பர்களிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பிச்சைபெருமாளை வேலூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (30) கடத்தி கொலை செய்ய ஆட்டோவை கொடுத்து உதவி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். போலீசாரிடம் அவர் ஜெயிலில் நடந்த தகராறு தொடர்பாக பிச்சை பெருமாளை ரவுடிகளான யுவராஜ் (27), பிரபு (26), ஜெயகாந்தன்(26) ஆகியோர் ஆட்டோவில் கடத்திச் சென்று கொலை செய்ததாக தெரிவித்தார்.

அதன்பேரில் தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் ரவுடிகள் 3 பேரும் அணைக்கட்டில் பதுங்கி இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து அணைக்கட்டுக்கு சென்ற தனிப்படை போலீசார் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ஜெயிலில் தகராறு நடந்தபோது, பிச்சை பெருமாள் எங்களை கொலை செய்து விடுவதாக மணிகண்டனிடம் கூறினான். இதுகுறித்து மணிகண்டன் எங்களிடம் தெரிவித்தான். எனவே அவன் எங்களை கொலைசெய்வதற்கு முன்பு நாங்கள் அவனை கடத்திச் சென்று தீர்த்து கட்டினோம் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்