அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மலை உச்சியில் போலீசார் சிறப்பு பூஜை

தீபத் திருவிழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மலை உச்சியில் போலீசார் சிறப்பு பூஜை நடத்தினர்.;

Update:2018-10-01 03:45 IST
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதில் பெரும்பாலானோர் திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் சித்ரா பவுர்ணமி மற்றும் கார்த்திகை மாதம் தீபத்திருவிழாவின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா முக்கிய விழாவாகும். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். தீபத்தின்போது காலையில் இருந்து மறுநாள் காலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மகா தீபம் நவம்பர் 23-ந் தேதி ஏற்றப்படுகிறது.

தீபத் திருவிழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் துறை சார்பில் ஆண்டுதோறும் அண்ணாமலையின் உச்சிக்கு சென்று சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.

அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி அறிவுரையின் பேரில் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜீவ்காந்தி, இளவரசி, ஏழுமலை மற்றும் போலீசார் 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை மலையின் உச்சிக்கு சென்று அங்குள்ள அருணாசலேஸ்வரர் பாதம் மற்றும் மகாதீபம் ஏற்றப்படும் இடத்திலும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

பின்னர் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தனர். 

மேலும் செய்திகள்