கூட்டுறவு ஊழியர்கள் 22-ந் தேதி ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி கூட்டுறவு ஊழியர்கள் சார்பில் வருகிற 22-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும், என சேலத்தில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.;

Update:2018-10-01 03:15 IST
சேலம், 


தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் சம்மேளனத்தின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டுறவு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. கூட்டுறவு துறை ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். பணி நிரந்தரம் செய்திட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கிட வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதே போன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8, 9-ந் தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். சமீபத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளுங்கட்சியினர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்து பொறுப்பிற்கு வந்துள்ளனர்.
மாற்று கட்சியினரோ, அமைப்புகளை சேர்ந்தவர்களோ வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றால் அதை தடுத்து நிறுத்தி உள்ளனர். வெற்றி பெற முடியாது என தெரிந்தால் தேர்தலை நடத்தாமலே நிறுத்தியுள்ளனர். இப்படி கூட்டுறவு சங்கத்தை சிதைத்துள்ளனர்.

கூட்டுறவு துறையில் பெற்ற கடனை தள்ளுபடி செய்த அரசு, அதன் தொகையான ரூ.1,700 கோடியை வழங்க வேண்டும். இந்த துறையில் அதிகமான ஊழல்கள் நடக்கிறது. ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதில் கூட முறைகேடு நடந்து உள்ளன.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அரசு பஸ்களில் 5 அல்லது 10 பேரை சென்னைக்கு ஏற்றி சென்று அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்