வேலியை பிடுங்கி பயிர்களை சேதப்படுத்திய வழக்கு: பெண்கள் உள்பட 4 பேர் கைது

வேலியை பிடுங்கி எறிந்து பயிர்களை சேதப்படுத்தியதாக பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பாய்லர் ஆலை ஊழியரை தேடி வருகின்றனர்.;

Update:2018-10-01 03:30 IST
திருவெறும்பூர்,


திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் குவளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வீதிவடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கற்பகவள்ளி (வயது 49). சிவக்குமார், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு அதே பகுதியில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், இந்த நிலத்தை நாங்கள் தான் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வந்தோம். எனவே, எங்களுக்கு தான் நிலம் சொந்தம் என சேகரும், பாய்லர் ஆலை ஊழியரான அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனும் பிரச்சினை செய்து வந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த நிலம் கற்பகவள்ளிக்கு தான் சொந்தம் என கூறினர். இதனை தொடர்ந்து சேகர் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதிலும், கற்பகவள்ளிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த நிலத்தில் கற்பகவள்ளி சம்பா நெல் நடவு செய்துள்ளார்.

இந்நிலையில் சேகர் தரப்பினர் நிலத்தை சுற்றி போடப்பட்ட கம்பி வேலியை பிரித்து எறிந்து பயிர்களை சேதப் படுத்தி விட்டதாக திருவெறும்பூர் போலீசில் கற்பகவள்ளி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனின் மாமனார் சந்தானராஜ்(75), சந்தானராஜின் மனைவி மணிபாலா (53), அவர்களது மகள் பிரியங்கா (24), சேகரின் மனைவி விஜயலெட்சுமி (48) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலை மறைவான ராதாகிருஷ்ணன், சேகர் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்