மலேசிய மணலுக்கு தடை விதிக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்
மலேசிய மணலுக்கு தடை விதிக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் படும் என சேலம் மணல் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் கண்ணையன் தெரிவித்தார்.;
சேலம்,
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணையன், பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மணல் லாரி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் கண்ணையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரின் மூலமாக காவிரி ஆற்று பகுதியில் தேவையான மணல் தேங்கியுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையான மணல் உள்ள நிலையில், அரசு செயற்கையாகவே மணல் தட்டுப்பாட்டை உருவாக்கி எம்.சாண்ட் குவாரிகளை 300-க்கும் அதிகமாக இயக்க அனுமதி அளித்துள்ளது. 10 எம்.சாண்ட் குவாரிகளுக்கு மட்டுமே தரச்சான்று உள்ளது. மற்ற அனைத்தும் தரமில்லாத எம்.சாண்ட் மணல்களை விற்கிறது. அந்த எம்.சாண்ட் குவாரிகளை ஆய்வு செய்து அதன் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.
நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் லோடு தேவைப்படும் நிலையில் அரசு குவாரிகள் மூலம் குறைந்த அளவு மணல் மட்டுமே வழங்கி வருகிறது. மலேசிய மணல் இறக்குமதியில் பெரும் முறைகேடு நடந்திருக்கிறது. முதலில் தனியார் நிறுவனத்தினர் மலேசிய மணலை இறக்குமதி செய்து ஒரு யூனிட் ரூ.5 ஆயிரத்திற்கு விற்பதாக கூறினர். அப்போது அரசு தரப்பில் மலேசிய மணலில் சிலிக்கான் இருக்கிறது என கூறி தடுத்து நிறுத்தியது. தற்போது அரசே அந்த மணலை இறக்குமதி செய்து ஒரு யூனிட்டை ரூ.10 ஆயிரத்திற்கு விற்கிறது. இது யாருடைய சுயலாபத்திற்காக அரசு செய்கிறது என தெரியவில்லை.
தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டாலும், கூடுதலான விலையாலும் கட்டுமான தொழில் மிகவும் நலிவடைந்து, சுமார் 25 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் அகதிகளாக மற்ற மாநிலங்களுக்கு வேலை வாய்ப்பை தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
காவிரி படுகையில் 70 மணல் குவாரிகளை திறந்து, அனுமதி பெற்ற மணல் லாரிகளுக்கு மணல் வழங்க வேண்டும். மலேசிய மணலுக்கு தடை விதிக்க வேண்டும். ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 15 நாட்களில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மணல் லாரிகளை நிறுத்தியும், பர்மிட், உரிமம் ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.