பன்றி காய்ச்சலுக்கு தோல் வியாபாரி பலி
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வாணியம்பாடியை சேர்ந்த தோல் வியாபாரி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்தார்.;
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சென்னாம்பேட்டையை சேர்ந்தவர் ஜமாலுதீன் (வயது 42). இவர் தோல் வியாபாரம் செய்து வந்தார். இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜமாலுதீனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஜமாலுதீனை குடும்பத்தினர் ஏற்கனவே அவர் அறுவை சிகிச்சை செய்த ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தொடங்கினார்கள். அப்போது ரத்தம், சிறுநீர் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் ஜமாலுதீனுக்கு பன்றி காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதே ஆஸ்பத்திரியில் அவருக்கு தனி வார்டு அமைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று முன்தினம் மாலையில் ஜமாலுதீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய உடலை குடும்பத்தினர் சொந்த ஊரான வாணியம்பாடிக்கு கொண்டு வந்தனர்.
இங்கு பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க ஜமாலுதீன் வீடு மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் தீவிர சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவருக்கு மருத்துவமனையில் நடந்த சோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்ததும் சென்னாங்குப்பம் பகுதியில் நோய் பரவுவதை தடுக்க வாணியம்பாடி நகராட்சி அலுவலர்கள் நகராட்சி ஆரம்ப பள்ளியில் முகாம் அமைத்து பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறியதாவது:-
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த ஜமாலுதீன் மூச்சு திணறல் காரணமாக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்த பரிசோதனை செய்தபிறகுதான் பன்றி காய்ச்சலின் தாக்குதல் இருந்தது தெரியவந்தது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அங்குள்ள சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவருடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஈரோட்டில் அவர் சிகிச்சை பெற்றுவந்த ஆஸ்பத்திரியிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு டாக்டர் சவுண்டம்மாள் கூறினார்.