கஞ்சா கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சரக்கு வேனில் கஞ்சா கடத்த முயன்ற ராஜஸ்தானை சேர்ந்த வாலிபரை, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர்.;

Update:2018-10-02 03:15 IST
திண்டுக்கல், 


திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் தலைமையில், இன்ஸ்பெக்டர் கவுசர் நிஷா உள்ளிட்ட போலீசார் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்கள், திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் ஆத்தூர் பிரிவு பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேனை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனில் சோதனை செய்தனர்.

அப்போது அதில் 2 மூட்டைகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேனில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த உகம்சந்த் குமாவத் (வயது 33) என்பது தெரியவந்தது. மேலும் அவர், ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். 2 மூட்டைகளில் இருந்த 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்