தேனியில் கொட்டித் தீர்த்த மழை: இடிந்து விழுந்த 3 வீடுகள்
தேனியில் கொட்டித் தீர்த்த மழையினால் 3 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. வேரோடு மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
தேனி,
தேனி அருகே பூதிப்புரம் கோட்டைமேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 65). இவருக்கு, அதேபகுதியில் சொந்தமாக 3 வீடுகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. மாயாண்டி மரக்காமலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் மாயாண்டியின் மனைவி மூக்கம்மாள் (60), மகள் பூங்கொடி (37), பேரன் விஸ்வா (14), பேத்தி ஐஸ்வர்யா (12) ஆகியோர் தூங்கிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவில் தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாயாண்டியின் 3 வீடுகளின் சுவர்கள் சேதமடைந்து இடிந்து வெளிப்பக்கமாக விழுந்தன.
பலத்த சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து, சுவர்கள் இடிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். சுவர்கள் வெளிப்பக்கமாக விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் 4 பேரும் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நேரில் சென்று சேதத்தை பார்வையிட்டு விவரங்களை சேகரித்தனர்.
இதேபோல் தேனி நகரில் நேற்று இரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் பழைய பஸ் நிலையம் அருகில் பெரியகுளம் சாலை, கம்பம் சாலை மற்றும் மதுரை சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
மழை பெய்து கொண்டிருந்தபோது மதுரை சாலையில் பங்களாமேடு பகுதியில் சாலையோரம் நின்ற மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது.