காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு தீபாவளி கதர் விற்பனை குறியீடு ரூ.80 லட்சம் கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு தீபாவளி கதர் விற்பனை குறியீடு ரூ.80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.;

Update:2018-10-03 04:00 IST
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடந்தது. கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- காஞ்சீபுரம் மாவட்டத்தில், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 2 இடங்களில் கதர் அங்காடிகளும், மாமண்டூர், திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் 2 சோப்பு அலகுகளும் செயல்பட்டு வருகின்றன. கதர் ரகங்களுக்கு தமிழக அரசு 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. சென்ற ஆண்டு தீபாவளி கதர் விற்பனை குறியீடு ரூ.52 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு ரூ.48 லட்சம் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தவிர கிராம பொருட்கள் சென்ற ஆண்டு ரூ. 17 லட்சத்து 52 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி கதர் விற்பனை குறியீடு ரூ. 80 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி பயன் பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கதர் அங்காடியில் காந்தி பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு கலெக்டர் பொன்னையா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்