திருத்தங்கலில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிம் மனுக்கள் வாங்கிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வீதி,வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்கள் வாங்கினார்.;
சிவகாசி,
சிவகாசி சட்டமன்ற அலுவலகம், திருத்தங்கல் நகராட்சியில் உள்ள அமைச்சரின் வீடு, திருத்தங்கல் நகராட்சி அலுவலகம், சிவகாசி நகராட்சி அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்களிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்று வருகிறார்.
இந்தநிலையில் திருத்தங்கல் நகராட்சியில் கண்ணகி காலனி, ஆலமரத்துபட்டி ரோடு, பள்ளபட்டி ரோடு, முனியசாமிநகர், முத்துமாரியம்மன் காலனி, மருத்துவர் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக சென்ற அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொதுமக்களை சந்தித்து மனுக்கள் வாங்கினார்.
முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை. இலவச வீட்டுமனை பட்டா, மின்விளக்கு வசதி, சாலை வசதி, வாருகால் வசதி உள்பட பல்வேறு கோரிக்கை சம்பந்தமாக அமைச்சரிடம் பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் அவர்கள் அளித்த மனுக்களை பெற்று கொண்டார். பொதுமக்கள் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் தொடர்ந்து அ.தி.மு.க. அரசிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அப்போது ராதாகிருஷ்ணன் எம்.பி., நகராட்சி ஆணையாளர்கள் சுவாமிநாதன்(திருத்தங்கல்), அசோக்குமார்(சிவகாசி), திருத்தங்கல் அ.தி.மு.க. நகர செயலாளர் பொன்சக்திவேல், சிவகாசி நகர செயலாளர் அசன்பதுருதீன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரமணா, கிருஷ்ணமூர்த்தி, நகர அவைத்தலைவர் கோவில்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.