பச்சிளம் குழந்தையை வீசிச்சென்ற தாய்

ஒட்டன்சத்திரம் அருகே, பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை வீசிச்சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-;

Update:2018-10-03 03:30 IST
ஒட்டன்சத்திரம், 

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையறும்பு தேவிசின்னம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று அதிகாலை அந்த தோட்டத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த வழியாக நடந்து சென்றவர்கள் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது துணியால் சுற்றப்பட்ட நிலையில் பெண் குழந்தை கதறி அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அந்த குழந்தையை மீட்டு கேதையறும்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாகவும், குழந்தைக்கு எந்த வித குறைபாடுகளும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து குழந்தையின் உடல்நிலை கவனிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த குழந்தை பிறந்து 2 மணி நேரத்தில் தோட்டத்தில் வீசப்பட்டுள்ளது. தொப்புள்கொடி கூட கீழே விழாத நிலையில் கல் நெஞ்சம் கொண்ட தாய் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. தகாத உறவில் பிறந்ததால் குழந்தையை வீசிச்சென்றாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசினாரா? என்பது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்