இறைச்சி கடைக்காரர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு

வடமதுரையில் இறைச்சி கடைக்காரர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.;

Update:2018-10-03 03:15 IST
வடமதுரை, 

வடமதுரை ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் அமீர்அம்ஜா(வயது 32). இவர் வடமதுரையில் இறைச்சி கடை வைத்துள்ளார். இவருக்கு ரோஸ் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் அமீர்அம்ஜா தனது குடும்பத்தினருடன் கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார்.

இந்தநிலையில் நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை அக்கம்பக்கத்தினர் பார்த்து அமீர்அம்ஜாவிற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அமீர் அம்ஜா உடனே தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. அவற்றை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும்.

இது குறித்து அமீர் அம்ஜா வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கருப்புசாமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி அமீர்அம்ஜாவின் வீட்டிலிருந்து திண்டுக்கல் பை-பாஸ் சாலை வரை ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. எனவே மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிவிட்டு, அந்த வழியாக தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்