கிராம பஞ்சாயத்துகளில் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்குகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளில் கிராம விளையாட்டு போட்டிகள் இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளில் கிராம விளையாட்டு போட்டிகள் இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கிராம விளையாட்டு போட்டி
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்டத்தில் உள்ள 403 கிராம பஞ்சாயத்துகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம பஞ்சாயத்துகளுக்கும், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 கிராம பஞ்சாயத்துகளுக்கும்,
இன்றும்(வியாழக்கிழமை), ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 கிராம பஞ்சாயத்துகளுக்கும் இன்று(வியாழக்கிழமை) முதல் வருகிற 12–ந் தேதி வரை விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கிராம பஞ்சாயத்துகளிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.
சான்றிதழ்–பதக்கம்
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தடகள போட்டிகள் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகளும், ஆண்களுக்கான கால்பந்து போட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 2 போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. போட்டியில் அந்தந்த கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.