மின்னல் தாக்கி வீடு சேதம்; 2 பேர் காயம்
தொடுபுழாவில் மின்னல் தாக்கி வீடு சேதம் அடைந்ததில், 2 பேர் காயமடைந்தனர். மேலும் நாளை மறுநாள் வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.;
இடுக்கி,
இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடுபுழா, மூலமற்றம், அடிமாலி, மூணாறு, செருதோணி, ராஜாக்காடு, கட்டப்பனை, நெடுங்கண்டம், குமுளி, பீர்மேடு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் முடங்கியுள்ளனர்.
தொடுபுழா நகரில் இடி-மின்னலுடன் பெய்த மழையின் போது பென்னி என்பவர் வீட்டின் மீது மின்னல் தாக்கியது. இதில் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் வீட்டில் இருந்த பென்னியின் சகோதரி ஆலீஸ் (வயது 40), மகள் அல்மரியா (10) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் இடுக்கி, வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யும் என்பதால் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படுமோ? என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.