கர்நாடகத்தில் மண்டியா, சிவமொக்கா உள்பட 5 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. தங்களது கட்சி வேட்பாளர் விலகியதால் ராமநகர் தொகுதியில் பா.ஜனதாவினர் ஓட்டுப்போட ஆர்வம் காட்டவில்லை.

Update: 2018-11-03 23:26 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ந் தேதி (அதாவது நேற்று) இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இந்த தேர்தலை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொண்டது. பல்லாரி மற்றும் ஜமகண்டி தொகுதிகளில் காங்கிரசும், சிவமொக்கா, மண்டியா, ராமநகர் தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியது.

இடைத்தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளிலும் பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டது. ஒட்டு மொத்தமாக 5 தொகுதிகளிலும் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இடைத்தேர்தலில் ராமநகர் தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதாவும், சிவமொக்காவில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவும், பல்லாரி தொகுதியில் ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தாவும் முக்கிய வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர். ஜமகண்டி தொகுதியில் மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சித்து நியாமகவுடாவின் மகன் ஆனந்த் நியாமகவுடா போட்டியிடுகிறார்.

இந்த 5 தொகுதிகளிலும் 54 லட்சத்து 54 ஆயிரத்து 275 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் ஆவார்கள். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 27 லட்சத்து 21 ஆயிரத்து 85 பேரும், பெண் வாக்காளர்கள் 27 லட்சத்து 30 ஆயிரத்து 949 பேரும், பிற வாக்காளர்கள் 462 பேரும், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்காளர்கள் 1,779 பேரும் உள்ளனர். இடைத்தேர்தலுக்காக 5 தொகுதிகளிலும் மொத்தம் 6,453 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் 57 வாக்குச்சாவடிகள் பிங்க் எனப்படும் இளஞ்சிவப்பு வாக்குசாவடிகள் ஆகும். அங்கு பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.

இடைத்தேர்தல் நடந்த 5 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. பல்லாரி, ஜமகண்டி தொகுதிகளில் உள்ள 3 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், அங்கு வாக்குப்பதிவு தொடங்க காலதாமதம் ஆனது. பின்னர் ஊழியர்கள், அதிகாரிகள் மின்னணு எந்திரங்களை சரி செய்தனர். அதைத்தொடர்ந்து, அந்த 3 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் திரண்டு வந்து ஓட்டு போட்டனர். சில வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் ஓட்டுப்போட வாக்காளர்கள் காத்து நின்றனர்.

ஆனால் காலை 7 மணியில் இருந்து 10 மணி வரை ராமநகர், ஜமகண்டி, மண்டியா, பல்லாரி, சிவமொக்கா ஆகிய 5 தொகுதிகளிலும் மந்தமான வாக்குப்பதிவே நடைபெற்றது. பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வாக்காளர்கள் இல்லாமல் காலியாகவே இருந்தது. இதனால் காலை 10 மணி வரை 5 தொகுதிகளிலும் 10 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன. காலை 10 மணிக்கு பிறகு 5 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் மதியம் 12 மணியளவில் 25 சதவீத வாக்குகள் பதிவானது.

ராமநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் எல்.சந்திரசேகர் விலகியதால், அந்த தொகுதிகளில் உள்ள 277 வாக்குச்சாவடிகளிலும் பா.ஜனதா சார்பில் பூத் ஏஜெண்டுகள் யாரும் இல்லை. பா.ஜனதா தொண்டர்களும் வாக்குச்சாவடி பக்கம் வரவில்லை. அதாவது பா.ஜனதா வேட்பாளர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியதால், இடைத்தேர்தலில் வாக்களிக்க பா.ஜனதாவினர் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே அருகே வாக்குச்சாவடி எண் 74-யில் ஓட்டுப்போட்டு விட்டு வெளியே வந்த நாராயணப்பா (வயது 74) என்பவர் கீழே சுருண்டு விழுந்து பலியானார். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

இந்த நிலையில், சிவமொக்கா மாவட்டம் சிகாபுராவில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தனது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா மற்றும் குடும்பத்தினருடன் வந்து ஓட்டுப்போட்டார். மண்டியா மாவட்டம் தொட்டரசினகெரே கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் அம்பரீஷ், மந்திரி டி.சி.தம்மண்ணாவுடன் வந்து ஓட்டுப்போட்டார்.

இதுபோல, பல்லாரியில் உள்ள வாக்குச்சாவடி எண் 62-க்கு தனது மனைவி பாக்கியலட்சுமியுடன் வந்து ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. ஓட்டுப்போட்டு சென்றார். அதுபோல, பல்லாரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சாந்தா, சிவமொக்கா தொகுதி ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் மது பங்காரப்பா, ஜமகண்டி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் நியாம கவுடா, மண்டியா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சிவராமே கவுடா, பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் சித்தராமையா ஆகியோரும் தங்களது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குகளை பதிவு செய்தார்கள். அதுபோல, மண்டியா தொகுதியின் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா இந்த முறையும் ஓட்டுப்போட மண்டியாவுக்கு வரவில்லை. ஏற்கனவே அவர் மண்டியா சட்டசபை மற்றும் மண்டியா நகரசபை தேர்தல்களில் நடிகை ரம்யா வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் இருந்து மாலை 6 மணி வரை 5 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மதியம் 3 மணியளவில் 5 தொகுதிகளிலும் 47 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆரம்பத்தில் மந்தமான வாக்குப்பதிவு நடந்த ராமநகர் தொகுதியில் மதியம் 3 மணி வரை 54.74 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

மாலை 6 மணி நிலவரப்படி சிவமொக்கா தொகுதியில் 61.05 சதவீதமும், பல்லாரியில் 63.85 சதவீதமும், மண்டியாவில் 53.93 சதவீதமும், ராமநகர் தொகுதியில் 73.71 சதவீதமும், ஜகமண்டி தொகுதியில் 81.58 சதவீத வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடந்த 5 தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக 71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

5 தொகுதிகளுக்கும் நேற்று நடந்த வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது, பா.ஜனதா தொண்டர்களுடன் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தொண்டர்கள் மோதல் உள்ளிட்ட காரணங்களை தவிர அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.

மேலும் வாக்குப்பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால், பெரிய அளவில் எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் அந்தந்த தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன.

இடைத்தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வருகிற 6-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ராமநகர் தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் எல்.சந்திரசேகர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியதால், அங்கு முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதனால் மற்ற 4 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்