கர்நாடக பா.ஜனதாவில் பரபரப்பு : எடியூரப்பாவுடன் ஜனார்த்தனரெட்டி திடீர் சந்திப்பு

பெங்களூருவில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவை முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சம்பவம் கர்நாடக பா.ஜனதாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-11-17 23:36 GMT
பெங்களூரு,

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி. இவர், பல்லாரியில் கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜனார்த்தனரெட்டி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன்பிறகு, அரசியலில் ஈடுபடாமல் ஜனார்த்தனரெட்டி ஒதுங்கியே இருந்து வருகிறார். கடந்த மே மாதம் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் தனது நண்பர் ஸ்ரீராமுலுவுக்கு ஆதரவாக ஜனார்த்தனரெட்டி பிரசாரம் செய்தார்.

ஆனால் ஜனார்த்தனரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கூறினார். இதனால் அவருடன் ஸ்ரீராமுலுவை தவிர பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் தொடர்பில் இல்லாமல் இருந்து வருகின்றனர். இதற்கிடையில், நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசியதாக ஜனார்த்தனரெட்டி மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இ்ரவு பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா வீட்டிற்கு ஜனார்த்தனரெட்டி சென்றதாகவும், அங்கு எடியூரப்பாவும் ஜனார்த்தனரெட்டியும் ரகசியமாக ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி கேட்டு பேரம் பேசியதாக கூறி தன் மீது பொய் வழக்குப்போட்டு முதல்-மந்திரி குமாரசாமி சிறைக்கு தள்ளிவிட்டதாக எடியூரப்பாவிடம் ஜனார்த்தனரெட்டி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், ஜனார்த்தனரெட்டி சந்தித்து பேசியது குறித்து நேற்று எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு எடியூரப்பா பதில் எதுவும் கூறாமல் சென்று விட்டார். எடியூரப்பாவை திடீரென்று ஜனார்த்தனரெட்டி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருப்பது கர்நாடக பா.ஜனதாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்