இடவசதி இன்றி தவிக்கும் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் மனு

இடவசதி இன்றி தவிக்கும் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பிக்கிலி கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2018-12-31 23:00 GMT
தர்மபுரி, 

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் மலர்விழி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் பிக்கிலி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஒரே வீட்டில் 4 முதல் 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் போதிய இடவசதியின்றி வசித்து வருகிறோம். பிக்கிலி கூட்டுரோட்டில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை மாவட்ட நிர்வாகம் மூலம் கையகப்படுத்தி அரசு மானிய உதவியுடன் எங்களுக்கு வீட்டுமனைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அரசு நிர்ணயிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கு தொகையை செலுத்த நாங்கள் தயாராக உள்ளோம். எனவே இந்த கோரிக்கையை பரிசீலித்து எங்கள் வாழ்வாதாரத்திற்கான வாழ்விடத்தை அமைத்து தர முன்வர வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பென்னாகரம் தாலுகா கொண்டையனஅள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மக்கள் 17 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து பட்டா வாங்க முயற்சி செய்து வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

தர்மபுரி அருகே உள்ள வெங்கட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், நல்லம்பள்ளி தாலுகா மாதேமங்கலம் ஊராட்சிகுட்பட்ட குட்டூர் கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சிறு மின்விசை பம்புடன் டேங்க் அமைக்கப்பட்டது. இதுவரை இந்த டேங்க்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். எனவே பொதுமக்கள் நலன்கருதி இந்த சிறுமின்விசை பம்புடன் கூடிய டேங்கை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

மேலும் செய்திகள்