கடலூரில் குடியரசு தின விழா கோலாகலம் கலெக்டர் அன்புசெல்வன் தேசிய கொடி ஏற்றினார்

கடலூரில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தேசிய கொடியை ஏற்றினார்.

Update: 2019-01-26 23:15 GMT
கடலூர், 

குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதற்காக விளையாட்டு மைதானத்தின் நுழைவு பகுதி வாழை மரம், கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

விழாவில் கலந்துகொள்வதற்காக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் காலை 7.55 மணிக்கு அங்கு காரில் வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் அன்புசெல்வன் தேசிய கொடியை ஏற்றினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர்கள் நம் தேசிய கொடியின் மூவர்ணத்தை நினைவு கூறும் வகையில் மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டனர்.

இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான பேண்டு வாத்திய குழுவினர் பேண்டு வாத்தியம் இசைத்தபடி முன்னால் செல்ல அவர்களை பின் தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல்படை, தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட, சாரண-சாரணிய, செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகள் அணிவகுத்து வந்தனர்.

பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 39 போலீஸ்காரர்களுக்கு முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார். தொடர்ந்து விழா மேடையின் வலதுபக்கம் அமர்ந்து இருந்த தியாகிகளுக்கும், மறைந்த தியாகிகளின் மனைவிகளுக்கும் கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

இது முடிந்த பின்னர் வருவாய்த்துறை, மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு துறை, வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு நினைவுபரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 27 ஆயிரத்து 733 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார்.

விழாவில் கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, தட்டாஞ்சாவடி புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 9 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும், மற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சப்-கலெக்டர் சரயூ, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சந்தோஷினி சந்திரா, செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், கலெக்டர் அன்புசெல்வன் மனைவி மாலதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனைவி ராஜலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அண்ணாதுரை, நேர்முக உதவியாளர் பூவராகன், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். விழா நிகழ்ச்சிகளை தாசில்தார் ஜான்சிராணி தொகுத்து வழங்கினார். விழாவையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாகுல்அமீது, பழனி ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், உதயகுமார், ஏழுமலை மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கு வந்தவர்கள் அனை வரையும் மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலம் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்