கரூர் கல்வித்துறை அலுவலகங்களில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன

கரூர் கல்வித்துறை அலுவலகங்களில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கொடுத்தனர்.

Update: 2019-01-27 23:00 GMT
கரூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) கடந்த 22-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டத்திலும் ஈடுபட்டனர். கரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் செய்ததாக 14 ஆசிரியர்கள், ஒரு அரசு ஊழியர் என 15 பேர் கைது செய்யப்பட்டு கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று (திங்கட் கிழமை) மறியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தினால் 407 தொடக்க பள்ளிகள், 85 நடுநிலை பள்ளிகள் என 492 பள்ளிகளில் வகுப்புகள் எடுக்க முடியாத சூழல் நிலவி வருவதால் மாணவ- மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 3,360 ஆசிரியர்களுக்கு உரிய விளக்கம் கேட்டு கல்வித்துறை சார்பில் நோட்டீசு அனுப்பபட்டும் அவர்கள் பணிக்கு திரும்பி வராதது ஏமாற்றம் அளிக்கும் விதமாகவே உள்ளது.

இந்த நிலையில் அரசு அறிவுறுத்தலின் பேரில் வகுப்புகள் நடக்காத வகையில் உள்ள பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கான நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கரூர் தாந்தோன்றிமலையிலுள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேற்று காலை முதலே பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் குவிந்தனர். பின்னர் அவர்கள் தங்களது விவரங்களை குறிப்பிட்டு தற்காலிக ஆசிரியர் பணியை வழங்குமாறு கூறி விண்ணப்பங்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தங்கவேலுவிடம் கொடுத்து சென்றனர். அந்த விண்ணப்பத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை என எந்த பிரிவில் ஆசிரியராக பணியாற்ற விருப்பம் என்பதையும், தங்களது ஆசிரியர் பணி அனுபவம் உள்ளிட்டவற்றையும் விளக்கம் எடுத்து கூறினர். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார்கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் நகலையும் விண்ணப்பத்துடன் இணைத்து கொடுத்திருந்தனர். திடீரென அங்கு ஆய்வுக்கு வந்த கலெக்டர் அன்பழகன், தற்காலிக பணிநியமன நடைமுறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

விண்ணப்பங்களை பெற்று கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ஆசிரியர் காலியிடம் உள்ள பள்ளிகளுக்கு அரசு விதிப்படி தற்காலிகமாக நியமனம் செய்யப்படுவது குறித்த விவரங்களை அவர்களிடம் எடுத்து கூறினார். மேலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகளுக்கு பணியமர்த்தப்பட வேண்டும் எனில் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளினை தேர்ச்சியுடன் குறிப்பிடத்தக்க மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். நடு நிலைப்பள்ளிகளுக்கு பணியமர்தப்பட வேண்டும் எனில், அந்த தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என்பன உள்ளிட்டவை அடிப்படை தகுதியாக கருதப்பட்டன. இதை தவிர ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் சார்பில் கடந்த 2014 முதல் நடத்தப்பட்ட தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் குறித்த விவரம் கல்வித்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. அனைத்து விவரங்களையும் ஆய்வுக்குட்படுத்தி உரிய முறையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் நடக்கும் என முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் செல்வராசு கரூருக்கு வருகை தந்து, தற்காலிக பணிநியன விண்ணப்பம் எவ்வளவு வரபெற்றுள்ளது? ஆசிரியர்களை எவ்வாறு தேர்வு செய்வது? என்பது குறித்து அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம், வட்டார கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்