திருப்பூரில் கண்டக்டரை தாக்கி விட்டு மர்ம ஆசாமிகள் தப்பி ஓட்டம்

திருப்பூரில் கண்டக்டரை தாக்கி விட்டு மர்ம ஆசாமிகள் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து அந்த வழியாக வந்த அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;

Update:2019-02-01 04:30 IST
திருப்பூர்,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான பஸ், குன்னத்தூரில் இருந்து திருப்பூர் புதிய பஸ் நிலையம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சின் கண்டக்டராக தெய்வசிகாமணி(வயது 36) இருந்தார். பஸ் பெருமாநல்லூரில் இருந்து பாண்டியன் நகருக்கு வந்தபோது படிக்கட்டில் ஒரு பெண் நின்று பயணம் செய்ததாக தெரிகிறது. அந்த பெண்ணை பஸ்சுக்குள் ஏறி வருமாறு தெய்வசிகாமணி கூறியுள்ளார். இதில் அந்த பெண்ணுக்கும் அவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த பெண் பாண்டியன் நகரில் இறங்கி சென்று விட்டார். அந்த பஸ் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து விட்டு அங்கிருந்து மீண்டும் குன்னத்தூர் நோக்கி புறப்பட்டது. பாண்டியன்நகர் பஸ் நிறுத்தத்தில் இரவு 9.15 மணிக்கு அந்த பஸ் நின்றதும், 4 மர்ம ஆசாமிகள் திடீரென்று பஸ்சுக்குள் ஏறி தெய்வசிகாமணியை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. அப்போது படிக்கட்டில் பயணம் செய்த பெண்ணிடம் ஏன் தகராறு செய்தாய்? என்று கூறி தாக்கி விட்டு தப்பி ஓடினார்கள். இதனால் அவர்கள், அந்த பெண் அனுப்பிய ஆசாமிகள் தான் என்பது தெரியவந்தது.

பஸ்சுக்குள் ஏறி கண்டக்டரை தாக்கியதை கண்டித்து, டிரைவர் பஸ்சை நடுரோட்டில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த வழியாக வந்த 6 அரசு பஸ்களும் நடுரோட்டில் நிறுத்தப்பட்டன. டிரைவர், கண்டக்டர்கள் பஸ்சை இயக்காமல் தெய்வசிகாமணிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்கள். இதனால் பி.என்.ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமா மற்றும் போலீசார் விரைந்து வந்து கண்டக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலீசில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அரசு பஸ் டிரைவர்கள் பஸ்சை கிளப்பினார்கள். இதுதொடர்பாக தெய்வசிகாமணி திருமுருகன்பூண்டி போலீசில் புகார் கொடுக்க சென்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்