கொள்ளிடம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணி கெயில் நிறுவனம் சார்பில் நடந்தது
கொள்ளிடம் அருகே எரிவாயு குழாய் பதிக்கும் பணி கெயில் நிறுவனம் சார்பில் நடந்தது.;
கொள்ளிடம்,
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே வேம்படி கிராமத்தில் உள்ள வயலில் கெயில் நிறுவனம் சார்பில் பூமிக்குள் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி திடீரென நேற்று 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் கெயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லின் எந்திரங்களுடன் வந்தனர். பின்னர் லாரியில் ஏற்றி வரப்பட்ட குழாய்களை இறக்கி அதனை பூமிக்குள் பதிக்கும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அங்குதன் தலைமையில் ஒன்று சேர்ந்து கெயில் நிறுவன அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், வேம்படி கிராம மக்களிடம் தெரியப்படுத்தாமல், குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இங்கு குழாய் பதிப்பதால், கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, குழாய்கள் பதிக்கும் பணியை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் ஒன்று சேர்த்து போராட்டம் நடத்துவோம் என்று குறிப்பிட்டனர். பின்னர் ஓ.என்.ஜி.சி.யின் கெயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. சார்பில் 20-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. அங்கிருந்து வேம்படி, வேட்டங்குடி.எடமணல், திருநகரி வழியாக மேமாத்தூர் என்ற இடத்துக்கு 29 கி.மீட்டர் தூரத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு சேமிக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கவும், எரிவாயுவாகவும் பயன்படுத்தப்படும்.
குத்தாலம் மற்றும் திருமக்கோட்டை ஆகிய இடங்களில் இந்த வாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு பழைய பாளையத்தில் இருந்து 6 லட்சம் மீட்டர் கியூப் அளவில் எரிவாயுவை எந்தவித சேதமும் இன்றி சேமித்து பயன்படுத்த முடியும். இக்குழாய் 1.5 மீட்டர் ஆழத்திற்கு பூமிக்குள் பதிக்கப்படுகிறது. 24 இன்ச் அகலம் கொண்ட இந்த குழாய் துருபிடிக்காமல் இருக்க கெத்தோலிக் என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. இதனால் குழாய் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.
வயல்களில் விவசாயிகள் எந்த தயக்கமும் இன்றி விவசாய பணி செய்யலாம். இங்கு குழாய் பதிப்பதால் யாருக்கும் எந்தபாதிப்பும் இல்லை. யாரும் பயப்படத்தேவை இல்லை. இக்குழாய் பதிக்கும் பணி 2 மாதத்திற்குள் முடிவடைந்து எரிவாயு எடுத்து செல்லப்படும் என்றார். குழாய்கள் பதிக்கப்படும் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.