திருவண்ணாமலை, போளூரில் ரூ.47¾ கோடியில் ரெயில்வே மேம்பாலங்கள் கட்ட பூமி பூஜை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு

திருவண்ணாமலை மற்றும் போளூரில் ரூ.47¾ கோடியில் 2 ரெயில்வே மேம்பாலங்கள் கட்ட பூமி பூஜையை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.;

Update:2019-02-03 04:30 IST
போளூர், 

போளூரில் ரெயில்வே பாதையின் குறுக்கே ரூ.17 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் செஞ்சி ஏழுமலை, வனரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத் துறை (திட்டங்கள்) வேலூர் கோட்டப் பொறியாளர் சீனுவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார். அப்போது ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும் விதம் குறித்த வரைபடத்தை காண்பித்து அதிகாரிகள் விளக்கினர். இன்னும் 18 மாதத்திற்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் அதிகாரிகள் கூறினர்.

அப்போது போளூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், ஆட்டோ சங்கத்தினர் உள்பட ஏராளமான பொதுமக்கள் அமைச்சரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் “ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிக்காக ரெயில்வே கேட் மூடப்படும். மேலும் நகரில் இருந்து உள்ளே வர மற்றும் வெளியே செல்ல இருக்கும் ஒரு பாதையும் அடைக்கப்பட்டுள்ளது. எனவே இரு சக்கர வாகனங்கள் சென்று வர ஏதுவாக மாற்றுப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அவர்களிடம் கூறுகையில், “மேம்பாலம் அமைய உள்ள இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ரெயில்வே கண்மாய் வழியாக இலகுரக வாகனங்கள் சென்று வரும் வகையில் அந்த பாதை சீரமைக்கப்படும். சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள தனியாரிடம் அனுமதி பெறப்பட்டபின் அந்த வழியாக வாகனங்கள் செல்ல வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.

அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரூ.30 கோடியே 38 லட்சம் மதிப்பில் அமைய உள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த மேம்பாலம் குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “666 மீட்டரில் அமையவுள்ள இந்த ரெயில்வே மேம்பாலமானது திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் தொடங்கி திண்டிவனம் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகில் நிறைவடைகிறது.

இந்த மேம்பாலத்தின் இருபுறமும் 7 மீட்டர் அகலத்திற்கு இருபக்கமும் சேவை சாலை அமைக்கப்பட உள்ளது. மேம்பாலத்தின் இருபுறமும் நடைப்பாதையுடன் கூடிய வடிகால்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பாதசாரிகள் ஓய்வு எடுப்பதற்கு மேம்பாலத்தின் கீழ் மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த ரெயில்வே மேம்பாலம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும்” என்றனர்.

நிகழ்ச்சிகளில் உதவி கலெக்டர்கள் மைதிலி (ஆரணி), உமாமகேஸ்வரி (திருவண்ணாமலை), உதவி கோட்ட பொறியாளர்கள் கருணாகரன், கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர்கள் இனியவன், அருண், திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் ஜெயசேகர், போளூர் உதவி கோட்ட பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் நிதின், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா, அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குமார் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சுகுமார், நாமக்கல் என்ஜினீயரிங் கன்ஸ்ட்ரக்சன் தென்னரசு ஆகியோர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்