மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்: செய்முறை தேர்வுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் சாவு நண்பர்கள் 3 பேர் படுகாயம்

ஏரியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதியதில் செய்முறை தேர்வுக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2019-02-03 03:30 IST
ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள சந்தன கொடிக்கால் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் கல் குவாரியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் மோகன் (வயது 17). சோளப்பாடியை சேர்ந்த நவீன்குமார், சிகரலஅள்ளியை சேர்ந்த பிரவீன், அஜ்ஜனஅள்ளியை சேர்ந்த நந்திவாணன். இவர்கள் 4 பேரும் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று பள்ளியில் செய்முறை தேர்வு நடந்தது. நண்பர்கள் 4 பேரும் செய்முறை தேர்வு முடிந்த பின்னர் மதியம் பள்ளியில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பிரவீன்குமார் ஓட்டி சென்றார். அஜ்ஜம்பட்டி அருகே ஒரு வளைவில் திரும்பிய போது எதிரே வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த மாணவர் மோகன் சம்பவ இடத்திலேயே பலியானார். நவீன்குமார், பிரவீன், நந்திவாணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு 3 பேரும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஏரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் நடந்த செய்முறை தேர்வுக்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்தில் மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்