கள்ளக்குறிச்சி பகுதி தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை
கள்ளக்குறிச்சி பகுதி தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது வினியோகத்திட்ட மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். குடிமைப்பொருள் தனிதாசில்தார் அருங்குளவன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சில தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். மேலும் சினிமா டிக்கெட்டுகளில் எவ்வளவு தொகை என்று அச்சிடப்படவில்லை. இதனால் அரசுக்கு செலுத்தக்கூடிய வரி ஏய்ப்பு நடக்கிறது. எனவே தியேட்டர்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி நில அளவை பிரிவில் பட்டா மாற்றம் செய்ய மனுக்களை கணினி மூலம் பதிவு செய்தாலும், மனுவை பரிசீலனை செய்யாமல் தள்ளுபடி செய்கிறார்கள். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பல் சிகிச்சை பிரிவில் போதிய உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நுகர்வோர் சங்கத்தினர் முன்வைத்தனர்.
அதற்கு சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், இது தொடர்பாக சப்–கலெக்டர் ஸ்ரீகாந்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் அருண், அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர்கள் அண்ணாமலை, முரளிகிருஷ்ணன், சின்னசேலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், தொழிலாளர் நல துணை ஆய்வாளர் செல்வக்குமார், நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி, அரியலூர் நுகர்வோர் சங்க தலைவர் முருகன்,வேங்கைவாடி செயலாளர் தெய்வீகன் உள்பட நுகர்வோர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.