நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு கிரண்பெடி பதிலடி
முதல்–அமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு கவர்னர் கிரண்பெடி பதிலடி கொடுத்துள்ளார்.;
புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, கவர்னர் விதிமுறைகளை மீறி அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து அதிகாரிகளை மிரட்டுவதாக குற்றஞ்சாட்டினார். அவரது குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
முதல்–அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் மற்றும் அவரது அலுவலக அதிகாரிகளை குற்றம் சொல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இது முதல்–அமைச்சர் அலுவலக தரத்தின் தன்மையை குறைக்கும்.
அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து பொதுமக்களின் சேவையை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம். ஆய்வுகளின்போது மக்களின் தேவைகளையும் அறிந்து வருகிறோம். இது வெளிப்படையாக நடக்கிறது. இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை.
கடந்த ஆண்டு ஹெல்மெட் விவகாரத்திலும் முதல்–அமைச்சர் தலையிட்டார். அப்போது அபராதம் விதிப்பது, சட்டப்படியான நடவடிக்கைகள் வேண்டாம் என்று போலீசாரிடம் கூறினார். அந்த நேரத்தில் மக்கள் விதிமுறையை கிட்டத்தட்ட கடைபிடித்து வந்தனர்.
கடந்த 13 மாதங்களில் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளில் 114 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. முதல்–அமைச்சரின் சட்டத்துக்கு புறம்பான உத்தரவுகளால் ஹெல்மெட் அணிவதை அமல்படுத்துவதில் தயக்கம் காட்டினார்கள். அவர் இந்த விஷயத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.