கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.;
கோவில்பட்டி,
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் தை மாத சனி பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. மாலையில் சுவாமி-அம்பாளுக்கும், நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜன் மற்றும் பிரதோஷ குழு அமைப்பினர் செய்து இருந்தனர்.
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தை மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு, காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீசுவரர் கோவிலில் தை மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு, மாலையில் சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.