விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மராட்டியத்தில் 1½ கோடி பேர் பயன் அடைவார்கள்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மராட்டியத்தில் 1½ கோடி பேர் பயன் அடைவார்கள் என கருதப்படுகிறது.;

Update:2019-02-03 04:31 IST
புதுடெல்லி,

2019-2020-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்

மக்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு, விவசாயிகளுக்கு உதவித்தொகை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வேளாண்மையின் மேம்பாட்டுக்காக மட்டும் பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 981 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

வறட்சி, பருவம் தவறிய மழை, விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருப்பது பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் ஆகும்.

12 கோடி பேர் பயன் அடைவார்கள்

நிதி இலாகா பொறுப்பை கவனிக்கும் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில், 2 ஹெக்டேருக்கும் (சுமார் 5 ஏக்கர்) குறைவான சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், இந்த தொகை 3 தவணைகளாக அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்தார். அத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு கணக்கிட்டு இந்த தொகை வழங்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும் என்றும், இந்த நிதி ஆண்டில் (2019-2020) மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி செலவாகும் என்றும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல் தவணை ரூ.2 ஆயிரம் எப்போது?

‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட இருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் 2 ஹெக்டேருக்கும் குறைவான சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளை கண்டறிந்து இந்த நிதி உதவியை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

டிசம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், முதல் 4 மாதங்களுக்கான முதல் தவணை தொகை ரூ.2ஆயிரம் அடுத்த மாதத்துக்குள் (மார்ச்) வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசு கடிதம்

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த சிரமமும் இருக்காது என்று கருதுகிறேன்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய வேளாண்மை துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதி இருக்கிறது.

அதில், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் (2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்) பெயர், அவர் ஆணா? பெண்ணா? எஸ்.சி. அல்லது எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்தவரா? போன்ற விவரங்களை சேகரிக்குமாறும், அந்த பட்டியலை கிராம பஞ்சாயத்து அறிவிப்பு பலகையில் ஒட்டுமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. எவ்வளவு விரைவாக இந்த விவரங்களை சேகரிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் இந்த நிதி ஆண்டுக்கான நிதி உதவியை (ரூ.2 ஆயிரம்) விவசாயிகளுக்கு வழங்க முடியும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டு இருக்கிறது.

நில உரிமை ஆவணங்கள்

நில உரிமை தொடர்பான ஆவணங்களை மின்னணு மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த பணிகள் முடிந்து விட்டன. தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றால் கம்ப்யூட்டரில் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள நில ஆவணங்கள் தொடர்பான பிரதிகளை பெறலாம்.

கடந்த 1-ந் தேதி வரையிலான நில ஆவணங்களின் படி 2 ஹெக்டேர் சாகுபடி நில வரையறைக்குள் வரும் விவசாயிகள் இந்த நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

இவ்வாறு ராஜீவ் குமார் கூறினார்.

ரூ.500 போதுமானதா?

பேட்டியின் போது நிருபர் ஒருவர் குறுக்கிட்டு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி என்றால், மாதத்துக்கு ரூ.500 என்று ஆகிறது. இந்த தொகை அவர்களுக்கு போதுமானதா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராஜீவ் குமார் பதில் அளிக்கையில், ஏழை விவசாயிகளுக்கு மாதம் 500 ரூபாய் என்பது குறைவான தொகை அல்ல என்றும், இந்த பணத்தை பாசனத்துக்கு தண்ணீர் வாங்குவது, குழந்தைகளின் படிப்பு செலவு போன்றவற்றுக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறினார்.

மராட்டியத்தில் 1½ கோடி பேர்

மராட்டியத்தில் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்து இருக்கும் விவசாயிகள் 1½ கோடி பேர் இருப்பதாகவும், அவர்கள் ‘பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெறுவார்கள் என்றும் அந்த மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகம்

தமிழகத்தில் விவசாய நிலங்கள் ஏற்கனவே மின்னணு மயமாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.

2015-2016-ம் ஆண்டு வேளாண்மை துறை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் சுமார் 72 லட்சம் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். இவர்களில் 1 முதல் 1.99 ஹெக்டேர் வரை சாகுபடி நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம். ஒரு ஹெக்டேருக்கும் குறைவான சாகுபடி நிலம் வைத்திருக்கும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 62 லட்சத்து 24 ஆயிரம் ஆகும்.

எனவே ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 72 லட்சம் சிறு, குறு விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெற தகுதி உடையவர்களாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்