மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்

மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயம் அடைந்தனர்.;

Update:2019-02-04 04:30 IST
மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் திடலில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். இதில், 616 காளைகளும், 210 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கலிங்கப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டியில் உயிரிழந்த திருச்சி கல்லுக்குழி அருகே உள்ள முடுக்குப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் நினைவாக ஒரு காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் உள்ளூர் காளைகளும், அதனை தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்றன. சில காளைகள் தன்னை அடக்க வந்தவர்களை களத்தில் நின்று விளையாடி விரட்டியடித்தது. இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சைக்கிள், பீரோ, ஆட்டுக்குட்டி, சில்வர் பாத்திரங்கள் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப் பட்டது. அவர்களில் ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

முன்னதாக ஜல்லிக்கட்டு காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து தகுதி உள்ள காளைகள் மற்றும் வீரர்கள் மட்டுமே அனுமதித்தனர். 

மேலும் செய்திகள்