முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் 6 ஆண்டில் 321 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 321 பேருக்கு ரூ.21 கோடியே 44 லட்சத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.;
வேலூர்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் 2012-ல் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 528 குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ந் தேதி முதல் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி வரை 1 லட்சத்து 37 ஆயிரத்து 297 பயனாளிகள் ரூ.277 கோடியே 76 லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த காப்பீடு திட்டத்தில் 7 விதமான உறுப்பு மாற்று அறுவை செய்யும் வசதி உள்ளது. இந்த அறுவை சிகிச்சைகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையில் இருந்து ரூ.2 லட்சமும், மீதமுள்ள தொகை முதல்-அமைச்சரின் காப்பீடு நிதியில் இருந்தும் வழங்கப்படுகிறது. மருத்துவ காப்பீடு திட்டத்தில் மீதமுள்ள ரூ.3 லட்சம் அறுவை சிகிச்சை செய்த நபரின் குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.
அதன்படி முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் முதல்-அமைச்சரின் காப்பீடு நிதியை பயன்படுத்தி வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 208 பேருக்கு செவி, வாய், நரம்பு மாற்று அறுவை சிகிச்சை ரூ.12 கோடியே 57 லட்சத்திலும், 76 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ரூ.2 கோடியே 65 லட்சத்திலும், 25 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ரூ.3 கோடியே 63 லட்சத்திலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 5 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ரூ.1 கோடியே 9 லட்சத்திலும், 4 பேருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை 6 லட்சத்திலும், 2 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ரூ.71 லட்சத்திலும், ஒருவருக்கு செவிப்புல மூளை தண்டு மாற்று அறுவை சிகிச்சை ரூ.19 லட்சம் செலவிலும் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 321 பேருக்கு ரூ.21 கோடியே 44 லட்சத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.