வங்கிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

வங்கிகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் அறிவுறுத்தி உள்ளார்.;

Update:2019-02-04 03:45 IST
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் காவல் நிலைய சரக கோட்டத்தில் உள்ள கேளம்பாக்கம், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கல்பாக்கம், கூவத்தூர், சட்ராஸ், தாழம்பூர், மானாமதி போன்ற பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் மேலாளர்களை அழைத்து வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாமல்லபுரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் வங்கி மேலாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருட்டு சம்பவங்களில் ஈடுபட வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் போர்வையில் நோட்டமிட வரும் சந்தேக நபர்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து வங்கிகளின் நுழைவு வாயில் மற்றும் வங்கிகளின் உள்புறங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா இயங்க வேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் வங்கியின் முகப்பு வாயிலில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா இயங்க வேண்டும்.

கண்காணிப்பு கேமரா வசதி இல்லாத வங்கிகளுக்கு உடனடியாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். 24 மணி நேரமும் வங்கிகளில் காவலாளி பணியில் இருக்க வேண்டும். குறிப்பாக ஏ.டி.எம். வாசலில் காவலாளியை கண்டிப்பாக பணியில் அமர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்த துண்டு அறிக்கையும் வங்கி மேலாளர்களுக்கு காவல் துறை சார்பில் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வங்கிகளின் மேலாளர்கள், பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

கும்மிடிப்பூண்டியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) துரைராஜ் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், நாராயணமூர்த்தி, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், நகை மற்றும் அடகு கடைகளில் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? அவற்றின் செயல்பாடு எப்படி உள்ளது? தற்போது அவற்றின் செயல்பாடு குறித்த பதிவுக்காட்சிகளை அறிக்கையாக தரும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர்.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் மட்டுமன்றி வெளிப்புற காட்சிகளையும் பதிவு செய்திடும் வகையில் அமைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இது தவிர கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இடங்களில் உடனடியாக அவற்றை பொருத்த வேண்டும். பாதுகாப்பிற்காக பாதுகாவலர்களை சொந்த செலவில் நியமித்திட வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தினர்.

இதில் கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, எளாவூர், ஆரம்பாக்கம், பூவலம்பேடு, தச்சூர், பாதிரிவேடு மற்றும் மாதர்பாக்கம் பகுதிகளை சேர்ந்த வங்கி அதிகாரிகள், நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் என பலர் பங்கேற்றனர். 

மேலும் செய்திகள்